3 பேர் உயிரிழப்பு, கோடிக்கணக்கில் பொருட்சேதம்; கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல்
- IndiaGlitz, [Friday,May 03 2019]
வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிதீவிர புயலாக உருவாகியதால் இந்த புயல் ஏற்படுத்தும் சேதம் மிக அதிகமாக இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக புயல் பாதிக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் பேரிடர் மீட்புப்படைகளும், தீயணைப்பு துறையினர்களும், காவல்துறையினர்களும் மின்வாரிய துறையினர்களும் ஃபானி புயலை சந்திக்க தயார் நிலையில் இருந்தனர்.
இந்த புயலால் ஒரு உயிர்ச்சேதம் கூட இருந்துவிட கூடாது என்பதில் பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த அக்கறையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும் இதுவரை ஃபானி புயலுக்கு 3 பேர் பலியாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள பொருட்சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் ஒடிஷாவின் முக்கிய சாலைகளில் மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமானங்களும் இயங்கவில்லை என்பதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.