ஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்...! முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...!

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

குறிப்பிட்ட ஜாதியினரை சேர்ந்தவர்கள் திருவிழா நடத்தியதால், பெரியோர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ளது தான் ஒட்டனந்தல் கிராமம். இக்கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், அண்மையில் திருவிழா நடத்தியுள்ளனர். குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய அனுமதியில்லாமல், திருவிழா நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடரந்து அங்கு வந்த காவல் துறையினர் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்தனர். இதன்பின் விழா நடத்திய மக்கள் காவல் நிலையத்திற்கு சென்று மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதிக்கொடுத்துள்ளனர்.



இதைத்தொடர்ந்து தங்களிடம் அனுமதியில்லாமல் திருவிழா நடத்தியது தவறு எனக்கூறிய ஒரு ஜாதியினர் ஜாதிப்பஞ்சாயத்தை ஓட்டனந்தல் கிராமத்தில் கூட்டியுள்ளனர். இதில் அனுமதியில்லாமல் திருவிழா நடத்திய காரணத்தால், முன்னின்று நடத்தியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர். இதனால் விழாவை நடத்திய பெரியவர்கள் 3 பேர், பஞ்சாயத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். இது குறித்த காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக, காலை முதல் பலரும் ஜாதிவெறியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறியுள்ள இந்நிகழ்வு குறித்து, மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆயிரம் அம்பேத்கர்கள் வந்தாலும் இவங்கள திருத்த முடியாது போலயே...