ஊரடங்கில் வேலையிழந்ததால் கஞ்சா கடத்திய சென்னை சாப்ட்வேர் இஞ்சினியர்!
- IndiaGlitz, [Tuesday,September 08 2020]
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் மட்டும் கோடிக்கணக்கானோர் வேலை இழந்ததாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கின்றது. இவ்வாறு வேலை இழந்த ஒருசிலர் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் ஊரடங்கு காரணமாக வேலையை இழந்ததால் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிட்லபாக்கம் என்ற பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சரண்ராம். இவர் கொரோனா வைரஸ் காரணமாக திடீரென வேலையை இழந்தார். கைநிறைய சம்பளத்துடன் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த சரண்ராம், திடீரென வேலை பறிபோனதால் அதிர்ச்சி அடைந்தார். இவரை போலவே இவருடைய நண்பர்கள் சிலரும் வேலையிழந்தனர். இதனை அடுத்து தனது நண்பர்களுடன் இணைந்து கஞ்சா கடத்தி விற்பனை செய்ய தொடங்கினார்.
இந்த நிலையில் குரோம்பேட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் இவருடைய பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது சீட்டுக்கு அடியில் இருந்த கஞ்சா பார்சலை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சரண்ராம் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஊரடங்கு காரணமாக வேலை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு தற்போது கம்பி எண்ணி கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.