அச்சுறுத்தும் யாஸ் புயல்… தமிழகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
- IndiaGlitz, [Monday,May 24 2021]
கிழக்கு மத்திய வங்கக்கடல் (வடக்கு அந்தமான்) பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. மேலும் இது நாளை புயலாக வலுவடைந்து வடமேற்கு திசை நோக்கி பயணிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
யாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. வடக்கு அந்தமான் பகுதியில் தோன்றியுள்ள இந்த புயலினால் தற்போது தமிழகத்தின் நாகை, கடலூர், எண்ணூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தப் புயலின் தாக்கதினால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பொழியும் எனவும் கூறப்படுகிறது.
வடமேற்குத் திசைநோக்கிப் பாயும் இந்தப் புயல் வரும் 26 ஆம் தேதி மாலை ஒடிசா மற்றும் வங்காளதேசம் இடையே கரையை கடக்கும் என்றும் மேலும் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரையோரம் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
யாஸ் புயலின் தாக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் உள்ள கடற்கரையோரப் பகுதி மீனவர்கள் அடுத்த 4 நாள்களுக்கு மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.