கொத்துக் கொத்தாக செத்து மடியும் சீல்கள்… அதிர்ச்சியில் விலங்குநல ஆர்வலர்கள்!!!

  • IndiaGlitz, [Monday,October 26 2020]

நமீபியா கடற்கரை பகுதியில் இதுவரை 7,000 சீல்கள் செத்து மடிந்து, கரை ஒதுங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான காரணத்தைக் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் மேலும் அதிர்ச்சியான சில கருத்துகளை தெரிவித்து உள்ளனர். நமீபியாவின் வெல்விஸ் வளைகுடா பகுதி அடுத்த பெலிகன் பாயிண்ட் கடற்கரையில் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் சில சீல்கள் இறந்து கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.

அதற்கு அடுத்த வாரமும் சில சீல்கள் உயிரிழந்து கரை ஒதுங்கிய நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக 7,000 சீல்கள் உயிரிழந்து கரை ஒதுங்கி இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இப்படி சீல்கள் உயிரிழப்பதற்கான காரணத்தை ஆராய்ந்த ஒசியன் கன்சர்வேசன் அமைப்பினர் சீல்கள் விரும்பி உண்ணும் மீன் வகைகள் ஆண்டுதோறும் தொடர்ந்து இடப்பெயர்ச்சியை மேற்கொள்கின்றன.

மீன்கள் இடப்பெயர்ச்சி நேரத்தில் சீல்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. இதனால் சீல் உயிரினம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சமயத்தில் இப்படி சீல்கள் ஒட்டுமொத்தமாக உயிரிழந்து ஒரு இடத்தில் கரை ஒதுங்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்டனர். உணவுச் சங்கிலியில் இதுபோன்ற நிகழ்வுகள் இயல்புதான் என்றாலும் இச்சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.