'தூங்காவனம்' திரைவிமர்சனம் - கமல்ஹாசனின் முழுநீள ஆக்சன் விருந்து.

  • IndiaGlitz, [Wednesday,November 11 2015]

கமல்ஹாசன், த்ரிஷா நடித்த 'தூங்காவனம்' படம் குறித்து பலவிதமான தகவல்கள் ரிலீஸுக்கு முன்பு வெளியாகி கமல் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்.

கமல்ஹாசனும் யூகிசேதுவும் போதைமருந்து கும்பலின் காரை வழிமறித்து அதிலிருக்கும் பத்து கிலோ கோகைனை கைப்பற்றுகின்றனர். இருவரும் பங்குபோட்டுக்கொள்ளலாம் என முடிவு செய்திருந்த நிலையில், போதை மருந்து கடத்தல் தலைவன் பிரகாஷ்ராஜ், கமல்ஹாசனின் ஒரே மகனை கடத்தி வைத்து கொண்டு, கோகைன் உள்ள பையை கொடுத்தால்தான் மகனை விடுதலை செய்வோம் என்று மிரட்டியதோடு, கோகைன் உள்ள பையுடன் இரவு பப் ஒன்றுக்கு வரச்சொல்லுகிறார்.

மகனை காப்பாற்ற யூகிசேதுவின் எதிர்ப்பையும் மீறி கோகைன் பையுடன் செல்லும் கமல், அந்த பப்பில் உள்ள ஆண் டாய்லெட்டில் பையை மறைத்து வைத்துவிட்டு, பிரகாஷ்ராஜிடம் பேச்சுவார்த்தை நடத்த செல்கிறார். கமல்ஹாசனை பின் தொடர்ந்து வந்த இன்னொரு போலீஸ் அதிகாரியான த்ரிஷா, ஆண் டாய்லெட்டில் உள்ள கோகைன் பையை எடுத்து பெண் டாய்லெட்டுக்கிற்கு மாற்றிவிட்டு, தனது சக அதிகாரியான கிஷோரிடமும் தகவல் சொல்கிறார். பிரகாஷ்ராஜிடம் பேச்சுவார்த்தையை முடித்து விட்டு பத்து நிமிடங்களில் கோகைன் பையுடன் வருவதாக சொல்லி செல்லும் கமல், ஆண் டாய்லெட்டில் கோகைன் பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறார். ஒருபுறம் பையுடன் வந்தால்தான் மகன் உயிரோடு கிடைப்பான் என பிரகாஷ்ராஜ் மிரட்ட, இன்னொருபுறம் கமல்ஹாசனை பிடிக்க த்ரிஷா மற்றும் கிஷோர் குரூப் விரட்ட, இறுதியில் கோகைன் பை யாரிடம் கிடைத்தது? கமல்ஹாசன் தனது மகனை மீட்டாரா? என்பதுதான் மீதிக்கதை.


கமல்ஹாசன் ஏற்கனவே பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர்தான் .ஆனால் இந்த படத்தில் பாசத்திற்கும் கடமைக்கும் உள்ள போராட்டத்தை அவர் நடிப்பில் பார்க்க முடிகிறது. மகனை மீட்க பிரகாஷ்ராஜிடம் பேரம் பேசுவது, உண்மை தெரியாமல் த்ரிஷா தன்னை விரட்டுவது குறித்து அவரிடம் விளக்க முயற்சிப்பது, மகனிடம் பாசத்தை பொழிவது, என கமல் பல இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார். த்ரிஷா மற்றும் கிஷோருடன் சண்டைக்காட்சிகள் மற்றும் மதுஷாலினிக்கு கொடுக்கும் திடீர் உதட்டு முத்தம் என ஆங்காங்கே கமல் டச் களும் உண்டு.

த்ரிஷாவுக்கு இந்த படம் முற்றிலும் வித்தியாசமானதாக அமைந்துள்ளது. ஹீரோவுடன் மரத்தை சுற்றி பாடலுக்கு மட்டும் வந்துபோகும் ஹீரோயினியாக இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார். கமலுடன் இவர் போடும் சண்டைக்காட்சிகளில் கமலுக்கு இணையாக ஈடுகொடுத்து நடித்ததை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். கிளைமாக்ஸில் கமல் மற்றும் கிஷோர் யார் என்று புரிந்து கொண்டு அதிர்ச்சி அடைவது என த்ரிஷாவின் நடிப்புக்கு நல்ல தீனி இந்த படத்தில் கிடைத்துள்ளது.

பிரகாஷ்ராஜின் வழக்கமான நையாண்டித்தனமான வில்லத்தனம். பல படங்களில் இதே பாணி நடிப்பை நாம் ஏற்கனவே பார்த்துள்ளதால் கொஞ்சம் சலிப்பாகிறது. கிஷோர் மற்றும் சம்பத் இருவருக்கும் கொஞ்சம் வெயிட்டான கேரக்டர்கள். இருவருமே அதை உணர்ந்து நன்றாக நடித்துள்ளனர்.

மதுஷாலினி மற்றும் ஆஷா சரத் இருவருக்குமே சிறிய வேடம்தான் எனினும் சிறப்பாக செய்துள்ளார். உமா ரியாஸ்கான் காட்சிகள் சில நிமிடங்கள்தான் என்றாலும் கமலுடன் மோதும் அந்த ஒருசில காட்சிகள் சூப்பர். கமலின் மகனாக வரும் சிறுவன் அமைதியான அதே நேரத்தில் மிக இயல்பாக நடித்துள்ளார். ஒருசில காட்சிகளில் வரும் ஜெகனும் ஓகே

படத்தில் முதல் இருபது நிமிடங்கள் தவிர முழுக்க முழுக்க அந்த இரவு பப்'பில் முடிந்துவிடுகிறது. இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வாவின் திரைக்கதையில் விறுவிறுப்பு, டுவிஸ்ட், ஆகியவைகள் ஆங்காங்கே சரியான அளவில் உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க பப்பில் கமல், த்ரிஷா, கிஷோர், பிரகாஷ்ராஜ், சம்பத் என அனைவரும் மேலே ஏறுவதும் கீழே இறங்குவதுமான காட்சிகல் ரிப்பீட் ஆவதை போல் தெரிகிறது. முதலில் கமல் தனது மகனை காப்பாற்றிவிட்டு பின்னர் மீண்டும் கோட்டைவிடுவது போன்ற காட்சிகள் நம்பும்படி இல்லை. பக்கம் பக்கமாக வசனங்கள் இல்லாமல் நறுக்கென அமைத்த வசனங்கள், காமெடி, பாடல்கள், நகைச்சுவை, என வலுக்கட்டாயமாக புகுத்தாமல், குருதிப்புனல், உன்னைபோல் ஒருவன் ஸ்டைலில் ராஜேஷ் எம்.செல்வா இந்த படத்தை இயக்கியுள்ளார்.


ஜிப்ரானின் இசையில் ஒரே ஒரு பாடல்தான். அதுவும் படம் முடிந்தபின்னர்தான் வருகிறது. ஆனால் இந்த படத்தின் மிகபெரிய பலமே பின்னணி இசைதான். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளின் பின்னணி மிக அருமை

ஒரே இரவு விடுதிக்குள் படம் முழுவதையும் முடித்திருந்தாலும் கேமராமேனுக்கு செம வேலை. ஒளிப்பதிவாளர் சானு வார்கசி மற்றும் எடிட்டர் ஷான் மொஹம்மது ஆகியோர்களின் கடுமையான உழைப்பு படத்தில் தெரிகிறது. படத்தின் கதைக்கு தேவையில்லாத காட்சி என்று எதுவுமே இல்லாதவாறு எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது சிறப்பான அம்சமாகும்

கில்ஸ் மற்றும் ரமேஷ் அமைத்துள்ள ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் உள்ளது. ஹீரோ என்பதற்காக பத்து பேரை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகள் இல்லாமல் மிக இயல்பாக, நம்பும்படியாக சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளது சிறப்பு.

ராஜேஷின் திரைக்கதை, கமல், த்ரிஷாவின் நடிப்பு, அருமையான பின்னணி இசை என இருந்தாலும், கதை சொல்லும் பாணி கொஞ்சம் ரிச்சாக இருப்பதால் பி மற்றும் சி ஆடியன்ஸ்களுக்கும், பொழுதுபோக்கு படம் பார்க்க வரும் ஆடியன்ஸ்களுக்கும் இந்த படம் புரியுமா? என்பதையும், கமரிஷியலாக வெற்றி பெறுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மொத்தத்தில் 'தூங்காவனம்', மனதை விட்டு நீங்காத மற்றொரு கமல் படம்.