Thondan Review
சமுத்திரக்கனி படம் என்றாலே அதில் பொழுதுபோக்கென்பது மேம்போக்காகத்தான் இருக்கும் ஆனால் சமூகத்துக்கு தேவையான செய்திகள் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும். தொண்டனிலும் அதே பாணியில் தொடர்ந்திருக்கிறார் ஆனால் என்ன கதையோட்டம் கமர்ஷியலாக இருக்க எடுத்த விதம் அதற்க்கு பொருந்தாமல் போய்விடுகிறது.
விஷ்ணு (சமுத்திரக்கனி) எல்லா விதத்திலும் ஒரு நல்ல மனிதர் அவர் தொழில் ஆம்புலன்ஸ் ஓட்டுவது. மந்திரியின் மகனான நாராயணன் (நமோ நாராயணன்) தன் கூலிப்படையை ஏவி ஒரு அடியாளை வெட்டி வீழ்த்த அவனுக்கு கொஞ்சூண்டு உயிர் இருப்பதை அறிந்து காப்பாற்றி விடுகிறார். வில்லனுக்கு பகையாகிறார். அவர் நண்பர் விக்னேஷ் (விக்ராந்த்) தன தங்கை (அர்த்தனா) வை விரும்பி பின்னால் சுற்றுகிறார் ஆனால் அவள் ஏற்க மறுக்க தன் நண்பர்கள் தூண்டுதலால் ஆசிட் வீச நினைக்க ஹீரோ அவரை அடிப்பதை தவிர்த்து பெண்களை எப்படி மரியாதையுடன் நடத்த வேண்டும் அவர்கள் விரும்புவதை போல் வாழ வேண்டும் என்று க்ளாஸ் எடுக்க திருந்தி(!!!) ஆம்புலன்ஸ் அசிஸ்டண்டாக மாறுகிறார். இன்னொரு புறம் ஊரில் திருட்டு போக இரவு காவலுக்கு சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு மற்றும் சிலர் காவல் இருக்க ஒரு ஆவி சுற்றுகிறது பல காட்சிகள் இப்படி ஓடிய பிறகு சுனைனா தான் அந்த ஆவி காதலுக்காக அப்படி செய்தார் (???) என்று ஒரு வழியாக இருவரும் ஜோடி சேர்கிறார்கள். அர்த்தனாவின் தோழி வில்லனின் தம்பியை பஸ்சில் செருப்பால் அடித்து விட அவன் கல்லூரிக்குள் புகுந்து உடைந்த மேஜை காலால் அடித்து கொல்ல முயற்சிக்க அர்த்தனாவும் மற்ற மாணவிகளும் சேர்ந்து அவனை தாக்குகிறார்கள். சமுத்திரக்கனியின் ஆம்புலன்ஸ் வந்து அவனை ஏற்றி கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்ல அவன் உயிர் பிரிந்து விடுகிறது. கோபம் அடையும் நமோ நாராயணன் ஹீரோ குடும்பத்தையே அழிக்க நினைக்க எப்படி ஹீரோ ஜெயித்தார் என்பதே மீதி கதை.
தமிழ் சினிமாவில் இருக்கும் மிக சிறந்த குணசித்ர நடிகர் சமுத்திரக்கனி கமர்ஷியல் ஹீரோவாக கொஞ்சம் தடுமாறியிருக்கிறார், குறிப்பாக காமடியிலும் காதல் காட்சிகளிலும். அனால் சமுதாய அக்கரையில் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் நெஞ்சை கிழித்து கொண்டு உள்ளே செல்கின்றன. ஒரு நீள காட்சியில் அழிந்து போன நூறு வகை நாட்டு காளைகள் பெயர்களை மூச்சு விடாமல் சொல்லிவிட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளையும் சாட்டையால் அடிப்பது போல் தையிரியமாக கேள்வி கேட்பது புல்லரிக்க வைக்கிறது. விக்ராந்தின் திரை வாழ்க்கையில் சீக்கிரம் மறக்க வேண்டிய அளவுக்கு அப்படி ஒரு ஒப்புக்கு சப்பான் பாத்திரம் அவருக்கு. சுனைனாவும் அர்த்தனாவும் அழகாக இருக்கிறார்கள் நமக்கு ஆறுதலாகவும் இருக்கிறார்கள். கஞ்சா கருப்பு இருக்கிறார் சிரிப்பு துளி கூட இல்லை. வேல ராமமூர்த்தி, நமோ நாராயணன், ஞான சம்பந்தம், திலீபன் உட்பட படத்தில் அணைத்து நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர். பட ஓட்டத்தால் நாம் சற்று கோமாவில் இருப்பதை உணர்ந்தோ என்னவோ திடீரென்று சூரியும் தம்பி ராமையாவும் கிளைமாக்ஸில் ஆஜராகிறார்கள். சுதாரிக்கும் நமக்கு அவர்கள் அடிக்கும் மிக சாதாரண ஜோக்குகளுக்குகே சற்று அதிகமாகவே சிரித்து வைக்கிறோம்.
சம கால நிகழ்வுகளான ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயி தற்கொலை, பெண்கள் மீது வான் கொடுமை மற்றும் கொலை வெறி தாக்குதல், அரசியல்வாதிகளின் சுயநலமான போக்கு என்று எதையுமே விட்டு வைக்காமல் தைரியமாக கையாண்ட சமுத்திரக்கனிக்கு ஒரு சபாஷ். அதிலும் இளைஞர்கள் தங்களுக்குள் இருக்கும் தீயை அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று நிறைய காட்சிகளில் ஞாபகப்படுத்தியதற்கும் அவருக்கு சல்யூட். கனியின் எல்லா படங்களில் இருப்பதை போல் இதிலும் மனிதம் எனும் மகத்துவத்தை மறக்காமல் பறைசாற்றுகிறார்.
ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் சிறப்பு குறிப்பாக "வசமுள்ள பூவா' நெகிழவைக்கிறது. ஏகாம்பரம் மற்றும் ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவும் ஏ எல் ரமேஷின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்றார் போல் கச்சிதம். நாம் முன்பு சொன்னதை போல் சமுத்திரக்கனியின் எழுத்து இயக்கத்தில் உரையாடல்கள் மட்டுமே நம்மை கவர்கிறது மற்றபடி தாறு மாறாக போகும் திரைக்கதை ஹீரோவை தவிர அழுத்தமில்லாத மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் அரத பழசான காட்சி அமைப்புகள் ஏமாற்றம் அளிக்கின்றன என்பதும் உண்மையே.
சமுத்திரக்கனியின் தைரியமான சமுதாய பார்வைக்காக தொண்டனை நாம் பார்க்கலாம்.
- Read in English