ரஜினிகாந்த் இலங்கை செல்ல முக்கிய அரசியல் கட்சி தலைவர் எதிர்ப்பு
Friday, March 24, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக கட்டியிருக்கும் 150 வீடுகளை திறந்து வைக்க ரஜினிகாந்த் சம்மதித்துள்ளதாக வெளிவந்த செய்தியினை பார்த்தோம்
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள வேண்டாம் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க உள்ளார் என்கிற செய்திக்குறிப்பு லைகா நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஊடகங்களுக்குச் சொல்லப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் '2.0' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இலண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. தமிழ் மக்களை வஞ்சிக்கும் சிங்களத்தின் கொடும்போக்கைக் கண்டித்து எல்லோரும் பேசவேண்டிய நேரத்தில், அதை திசைதிருப்பும் உத்தியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
சிங்கள அரசுக்குத் துணைபோகும் பாஜகவின் அனுமதியோடு இவ்வறிவிப்புச் செய்யப்பட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை. ஏனெனில், ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர் ஒருவரை வைத்து ஒருவிழாவை நடத்தி அந்த ஒளிவெள்ளத்தில் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளிவிடுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று உலகத்துக்குக் காட்டவும் இந்நிகழ்ச்சி பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. லைகா நிறுவனத்துக்கும், மிகப்பெரும் செலவில் தயாரிக்கப்படுகிற அந்தப்படத்துக்கான உலக அளவிலான விளம்பரமாக அந்நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணுகிறது.
சிங்கள அரசாங்கத்துக்கும் தனியார் முதலாளிக்கும் நன்மை பயக்கும் இந்நிகழ்வைச் செயல்படுத்த எவ்வித ஞாயமுமின்றி உறவுகள், உடைமைகள் மட்டுமின்றி உரிமைகளையும் இழந்துநிற்கும் அப்பாவி மக்களின் கொடுந்துயரம் பயன்படுகிறது என்பதை நினைக்கும்போது உள்ளம் கொதிக்கிறது. கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும், எனவே, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் என்று விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு திருமாவளவனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments