செல்போன் சிக்னலுக்காக ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்… சுவாரசியத் தகவல்!

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

வம்சம் திரைப்படத்தில் கதாநாயகன் அருள்நிதி முதற்கொண்டு அனைவரும் செல்போன் சிக்னலுக்காக மரத்தில் ஏறி நின்று பேசும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அப்படி ஒரு செயலை ஒரு அமைச்சர் செய்து இருந்தால்? உண்மையில் இப்படியொரு சுவாரசியச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று இருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்து இருக்கும் பாஜக அமைச்சரவையில் பொதுச் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் பிரஜேந்திர சிங் யாதவ். இவர் கடந்த சில தினங்களாக அசோக்நகர் மாவட்டம் அம்கோ கிராமத்தில் தங்கி வருகிறார். அங்கு நடக்கும் பொருங்காட்சி ஒன்றில் பாகவத் கதா பாராயாமண நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அந்த கிராமம் முழுக்கவே செல்போன் டவர் கிடைக்காது எனக் கூறப்படுகிறது. இதனால் செல்போன் சிக்னலுக்காக அமைச்சர் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த 50 அடி உயர ராட்டினத்தில் ஏறி பேசிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிரஜேந்திர சிங், செல்போன் டவர் கிடைக்காததால் ராட்டினத்தில் ஏறி நின்று பேசினேன். இக்கிராமத்தில் உள்ள குறைகளை பொதுமக்கள் என்னிடம் கூறி வருகின்றனர். விரைவில் அனைத்தும் சரி செய்து தரப்படும் எனக் கூறி இருக்கிறார். இந்நிலையில் அமைச்சர் ஒருவர் செல்போன் டவருக்காக ராட்டினத்தில் ஏறிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.