நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற மாணவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய விவசாயிகள்
- IndiaGlitz, [Monday,November 19 2018]
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து உதவிக்கரம் குவிந்து வருகின்றது. அரசு, தனியார் அமைப்புகள், கல்லூரி மாணவர்கள், திரையுலகினர் உள்பட பலர் ஏராளமான நிதியுதவி, பொருளுதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி நேஷனல் கல்லூரி மாணவ, மாணவிகள் பல அத்தியாவசிய பொருட்களை சேகரித்து ஒரு வாகனத்தில் டெல்டா பகுதி மக்களுக்காக கொண்டு சென்றனர். கொண்டு சென்ற பொருட்களை தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம் நாடியம் என்ற கிராம மக்களிடம் விநியோகம் செய்துவிட்டு அவர்கள் திரும்ப முடிவு செய்தபோது அந்த பகுதி விவசாயிகள் , புயலினால் சாய்ந்த தென்னை மரங்களில் இருந்து பறித்த இளநீர்களை வாகனம் முழுக்க நிரப்பி மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய முழு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையிலும், நாடியம் பகுதி விவசாயிகள் தங்களுக்கு உதவி செய்ய வந்த வாகனத்தை வெறும் வாகனமாக அனுப்பாமல் தங்களால் முடிந்த பொருட்களை கொடுத்து அனுப்பியது அவர்களுடைய உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது.