ஒரு பைசா கூட காசு வாங்காமல் 75 ஆண்டுகளாக கல்வி கற்றுக்கொடுக்கும் முதியவர்!!!
- IndiaGlitz, [Thursday,October 01 2020]
பணமே வாங்காமல் தனது சொந்த கிராம மக்களுக்காக ஒடிசாவில் முதியவர் ஒருவர் 75 ஆண்டுகளாக, கல்விக் கற்றுக் கொடுத்து வருகிறார். அவருக்கு வயது 104 என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒடிசாவின் ஜெய்ப்பூர் மாவட்டம் பர்தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தா பிரஸ்தி. இவர் தன்னுடைய இளமை காலத்தில் ஒரு சிறந்த ஆசிரியராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற பின்னரும் தன்னுடைய கிராம மக்களுக்குக்காக தனிப்பட்ட முறையில் அதே ஆசிரியர் பணியைத் தொடர்ந்து இருக்கிறார். இப்படியே தொடர்ந்த இவருடைய கல்விப்பணி தற்போது 75 ஆண்டுகளை எட்டியிருக்கிறது. கிராமத்தில் உள்ள அனைவரையும் படித்தவர்களாக மாற்ற வேண்டும் என்பதே இந்த ஆசிரியரின் கனவாக இருந்திருக்கிறது.
இதுகுறித்து கருத்துக்கூறிய அந்த ஆசிரியர் நான் வேலைக்குப் போகும்போதே எங்கள் ஊரில் கையெழுத்துக்கூட போடத்தெரியாத மக்கள் இருந்தனர். அவர்களின் நிலைமையை மாற்ற வேண்டும் என நினைத்தேன். அப்படி ஆரம்பித்த என்னுடைய பணியால் என்னுடைய கொள்ளு பேரனுக்கும் தற்போது கல்வி கற்றுக் கொடுத்து வருகிறேன் என நெகிழ்ச்சிப் பொங்கத் தெரிவித்து இருக்கிறார்.
இத்தனை வருட பணியிலும் வகுப்பு எடுக்க ஒரு கட்டிடம் கூட கிடையாது என்பதுதான் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வெறுமனே கட்டாந் தரையிலும் மரத்தடியிலும் மாணவர்களை அமர வைத்து பாடங்களை பொறுமையாகச் சொல்லிக் கொடுக்கிறார். இவருடைய ஆர்வத்தைப் பார்க்கும் குழந்தைகள் அவர் சொல்வதை அப்படியே கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றனர். இதனால் கல்வி எனும் வரத்தை சிலர் கேட்காமலே தருவது பெரும் பேறு என்று பலரும் அவரைப் பாராட்டுகின்றனர்.