கட்சி தொடங்கலாம், ஆனால் ஆட்சிக்கு வரமுடியாது: கமல், ரஜினி குறித்து காங்கிரஸ் தலைவர்
- IndiaGlitz, [Tuesday,June 12 2018]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு ஆகியவை காரணமாக தமிழகத்தில் ஒரு ஆளுமை இல்லாத தலைவர் இருப்பதாகவும், அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த வெற்றிடத்தை புதியதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசனும், விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள ரஜினிகாந்தும் நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல், ரஜினி ஆகிய இருவரின் அடிப்படை கொள்கைகள், பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் இருவரும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதால் தேர்தல் நேரத்திலோ அல்லது தேர்தலுக்கு பின்னரோ இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கமல், ரஜினி அரசியல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியபோது, 'ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் புதிதாக கட்சி தொடங்கலாம் ஆனால் ஆட்சிக்கு வரமுடியாது என்றும், தமிழகத்தில் அதிமுக, திமுக வலிமையாக இருப்பதற்கு அதன் கட்டமைப்புதான் காரணம் என்றும் கூறியுள்ளார். ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான திருநாவுக்கரசரே இவ்விதம் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.