அறம்' படத்தை இதற்காகத்தான் பார்த்தேன்: தொல்.திருமாவளவன் பேட்டி
- IndiaGlitz, [Saturday,November 11 2017]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' படத்திற்கு பாராட்டுக்கு குவிந்து வருகிறது. ரசிகர்கள், திரையுலகினர், விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனைது வரும் இந்த படம் அரசியல்வாதிகளை தாக்கும் காட்சிகள் இருந்தாலும், அரசியல் தலைவர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று இந்த படத்தை பார்த்த விடுதலைச்சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது பாராட்டுக்களை படக்குழுவினர்களுக்கு தெரிவித்து கொண்டார்
அறம்' என்ற தலைப்பையும் இயக்குநர் கோபியையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதற்காகவே இந்த படத்தை பார்க்க வந்ததாக கூறிய திருமாவளவன் படம் குறித்து கூறியதாவது:
'அனைவருக்கும் புத்தி சொல்லுகிற அருமையான திரைப்படம். இது அறம் உள்ளவர்களால் ஆய்வுசெய்யப்படுமானால், சர்வதேச அளவில் விருதுகள் பெறுகிற படம். சமூக அக்கறை, மனித நேயம், தன்னம்பிக்கை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சாட்டையடி கொடுக்கிறது.
ராக்கெட் விட வேண்டும், இந்த நாட்டை வல்லரசாக்க வேண்டும் என்று துடிக்கிற ஆட்சியாளர்களுக்கு ஆழ்துளை கிணற்றில் விழுகிற குழந்தைகளைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. மனிதநேயம் உள்ள ஜனநாயக சக்திகள் அரசியல்வாதிகளாக இருந்தாலும் அதிகாரிகளாக இருந்தாலும் இந்தப் படத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறவர்கள் அரசியல்வாதிகளுக்கு அடிமைப்பட்டு இருக்க முடியாது என்பதை நயன்தாரா உணர்த்துகிறார். தான் மக்களுக்கு சேவை செய்ய கனவுகளோடு வந்தேன். ஆனால், அரசியல்வாதிகளின் கெடுபிடிக்குள் பணிசெய்யமுடியாத நெருக்கடிகளை சந்தித்தேன், அடிமைக்கு அடிமையாக வேலை செய்ய விரும்பவில்லை என்று பதவியை உதறி எறிகிறார். இவ்வாறு நறுக்கு தெரித்தாற்போல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
சமூக அக்கறையை ஊட்டும் 'அறம்' மிகச்சிறந்த ஒரு படம். இயக்குநருக்கும் படத்தை துணிந்து தயாரித்த ராஜேஷ் அவர்களுக்கும் வாழ்த்துகள். குத்தாட்டம், சண்டை, காதல் காட்சிகள் என வணிக நோக்கில் எந்தக் காட்சியும் அமைக்கப்படாமல் அனைவரையும் கவரும் படம் 'அறம்' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.