'சர்கார்' படம் குறித்து திருமாவளவன் கூறிய குழப்பமான கருத்து
- IndiaGlitz, [Thursday,November 08 2018]
தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கும் இல்லாத எதிர்ப்பு விஜய் படம் வெளியாகும் போது மட்டும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. விஜய்யின் முந்தைய படமான 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றிருந்த ஒருசில காட்சிகளுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது போலவே நேற்று முன் தினம் வெளியான 'சர்கார்' திரைப்படத்தின் ஒருசில காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் இந்த முறை வெறும் எதிர்ப்ப்பாக மட்டுமின்றி போலீஸ் புகார், நீதிமன்றத்தில் வழக்கு என சீரியஸாக போய்க்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் இடம்பெற்ற 49P என்ற பிரிவு குறித்த விழிப்புணர்வு, அனைவரும் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய நல்ல கருத்துக்களை எந்த அரசியல்வாதியும் இதுவரை பாராட்டவில்லை என்பது ஒரு துரதிஷ்டமே
இந்த நிலையில் இந்த படம் குறித்தும் இதனால் எழுந்து வரும் சர்ச்சைகள் குறித்தும் கருத்து கூறியுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியபோது, 'அதிகாரத்தை பயன்படுத்தி சர்கார் பட காட்சிகளை நீக்க சொல்வது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று என்றும், அதே நேரத்தில் கருத்துரிமை என்ற பெயரில் ஒரு கட்சியையோ, தனி நபரையோ மையப்படுத்தி சினிமா எடுக்கக்கூடாது' என்றும் கூறியுள்ளார்.
திருமாவளவன் கூறியுள்ள இந்த கருத்து 'சர்கார்' படத்திற்கு ஆதரவானதா? அல்லது எதிர்ப்பானதா? என்பது புரியாமல் சமூக வலைத்தள பயனாளிகள் குழப்பத்தில் உள்ளனர். மொத்தத்தில் விஜய் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் அச்சம் கொண்டிருப்பது மட்டும் உண்மை என தெரிகிறது.