ரஜினி கூறிய உவமைக்கு அதிர்ச்சி அடைய தேவையில்லை: திருமாவளவன்
- IndiaGlitz, [Monday,August 12 2019]
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசியபோது, 'உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரையும் மகாபாரதத்தில் உள்ள கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் கேரக்டர்களுடன் உவமைப்படுத்தி பேசினார். இந்த இருவரில் யார் கிருஷ்ணன்? யார் அர்ஜுனன்? என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அமித்ஷா, காஷ்மீர் விவகாரத்தை சிறப்பாக கையாண்டதாகவும், அவர் யார் என்பது அனைவருக்கும் தற்போது புரிந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமித்ஷா, மோடி ஆகிய இருவரையும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் ஆகியோரை உவமைப்படுத்தி ரஜினிகாந்த் பேசியது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கூறியதாவது:
ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் வரும் என எதிர்ப்பார்க்க முடியாது. அவர் மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துக்களை கூறுவதுண்டு. ஆகவே மகாபாரதத்திலிருந்து மோடி - அமித் ஷாவுக்கு உவமையாக சொல்லப்பட்ட கருத்தில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இது அதிர்ச்சி அடையக் கூடியதும் இல்லை.