பிரபல நடிகரின் படத்தை பார்த்து பாராட்டிய திருமாவளவன்
- IndiaGlitz, [Saturday,February 09 2019]
கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஐந்து படங்கள் வெளியான போதிலும் ஒருசில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக அரசியல்வாதிகள் பாராட்டும் படங்கள் வெகுசில படங்களாக உள்ளது.
அந்த வகையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் 'கண்ணே கலைமானே' படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்து இயக்குனர் சீனுராமசாமி மற்றும் நாயகன் உதயநிதி ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இந்த படம் குறித்து கூறியதாவது: கண்ணே கலைமானே' படம் மிகவும் யதார்த்தமானதாக இருக்கிறது. உதயநிதி உட்பட நடித்திருக்கும் அனைவரும் யதார்த்தத்துக்கு சற்றும் மாறாமல் நடித்திருந்தனர். குறிப்பாக, யுவன் ஷங்கர் ராஜாவின் கிராமத்து இசையும், வைரமுத்துவின் அர்த்தமுள்ள வரிகளும் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் இது கவித்துவமான திரைப்படம் என்று கூறியுள்ளார்.
திருமாவளவனுடன் இணைந்து இந்த படத்தை பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியபோது, சீனுராமசாமி, கிராமத்து மனிதர்களின் வாழ்வியலையும், குடும்ப உறவுகளின் பற்றுதலையும் மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார். காண்பதற்கு நிறைவான படமாக இருக்கிறது, என்றார்.
'கண்ணே கலைமானே' திரைப்படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த இரண்டு தலைவர்களின் பாராட்டு படத்தின் வெற்றிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.