'திருமணம்' : தரமான விருந்து!
வாழ்க்கையில் ஒரே ஒரு நாள் நடக்கும் திருமணம் என்ற கூத்துக்காக தன் வாழ்நாளில் சேர்த்து வைத்த சேமிப்பு அனைத்தையும் செலவு செய்துவிட்டு திருமணத்திற்கு பின் கஷ்டப்படுவதை தவிர்க்க, திருமணத்தை குறைந்த செலவில் நடத்தினால் வாழ்க்கை நிம்மதி இருக்கும் என்பதே இந்த படத்தின் அழுத்தமான ஒருவரி கதையாகும்
இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் நியாயமாக மனசாட்சிக்கு விரோதமின்றி வேலை பார்ப்பவர் சேரன். இவருடைய தங்கை காவ்யா சுரேஷும், சுகன்யாவின் சகோதரர் உமாபதி ராமையாவும் காதலிக்கின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராக காதலித்தாலும் அண்ணன் சேரனை விட்டுக்கொடுக்காத தங்கையாக காவ்யாவும், அதேபோல் தனக்காக வாழ்க்கையையே தியாகம் செய்த அக்கா சுகன்யா மீது பாசம் வைத்திருக்கும் தம்பியாக உமாபதியும் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த காதல் இருவீட்டார்களுக்கும் தெரிந்து இருவீட்டாரும் சந்தித்து திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யும்போது இருவீட்டார்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் திருமணமே நின்றுவிடும் நிலை ஏற்படுகிறது. அந்த பிரச்சனைகள் என்ன? பிரச்சனையை சேரன் சுமூகமாக தீர்த்து வைத்தாரா? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை
ஒரு ரொமான்ஸ் ஹீரோவுக்குரிய அத்தனை தகுதியும் உமாபதியிடம் உள்ளது. நடிப்பும் சுமாராக வருவதால் நல்ல கதையை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார்.
மலையாள நடிகை காவ்யா சுரேஷ் நடிப்பு ஓகே என்றாலும், உமாபதிக்கு பொருத்தமான ஜோடியாக தெரியவில்லை. அவ்வளவு பெரிய உடம்பை வைத்து கொண்டு பரதநாட்டியம் வேறு ஆடுகிறார்.
தம்பி ராமையாவும், எம்.எஸ்.பாஸ்கரும் குணசித்திர வேடத்தில் தங்கள் அனுபவத்தை பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக இருவரும் தனியாக சந்தித்து, தங்கள் குடும்பத்தின் பிளாஷ்பேக்கை கூறும் காட்சியில் இருவரின் நடிப்பும் சூப்பர்
சுகன்யா நல்லவரா? அல்லது வில்லியா? என்று சற்றே குழப்பமுள்ள கேரக்டர். இருப்பினும் தனது கேரக்டரின் தன்மையை புரிந்து சிறப்பாக நடித்துள்ளார். ஜெயப்பிரகாஷ், மனோபாலா ஆகியோர்களுக்கு சின்ன கேரக்டர்கள் தான் என்றாலும் மனதில் பதியும் கேரக்டர். குறிப்பாக ஜெயப்பிரகாஷ் கேரக்டர் போன்ற ஒருத்தர் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பார் என்பதால் அவரது கேரக்டர் மனதில் பதிகிறது. பாலாசரவணன் காமெடி ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கின்றது.
இந்த கதையின் மெயின் கேரக்டர் சேரனின் அறிவுடையநம்பி கேரக்டர்தான். பெயருக்கேற்றவாறு படம் முழுவதும் வாழ்க்கைக்கு ஏற்ற அறிவுரைகளை கேப் கிடைக்கும் இடத்தில் எல்லாம் தெளிக்கின்றார்.
இயக்குனர் சேரனாக அவர் சொல்ல வந்த கருத்து இன்னும் பல வருடங்களுக்கு திருமணம் செய்யவிருக்கும் ஒவ்வொருவருக்கும் தேவையானது. திருமணச்செலவு என்பது ஒரு செலவு கிடையாது. ஒவ்வொரு செலவும் ஒரு தானம் போன்றது என்று சேரனின் அம்மா கூற அதற்கு சேரன், ஆடம்பரமான திருமணம் என்பது கோடீஸ்வரர்களுக்கு வேண்டுமானால் ஒரு தானமாக இருக்கலாம்,ஆனால் கடன் வாங்கி ஆரம்பர திருமணம் செய்யும் நடுத்தர மக்களுக்கு அது தேவையில்லாத ஒரு சுமை என்றும் எந்த சாஸ்திரமும் கடன் வாங்கி தானம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை என்று கூறும் காட்சி அனைவரும் மனதில் பதிய செய்ய வேண்டிய கருத்து. மண்டபம் பிடிப்பது முதல் திருமண அழைப்பிதழ், பத்திரிகை, சாப்பாடு முதல் அனைத்து செலவுகள் குறித்த சேரனின் பார்வை, அதை பின்பற்றினால் நடக்கும் நன்மை ஆகியவை கடன் வாங்கி ஆடம்பர திருமணம் செய்யும் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய ஒன்று
ஆனால் அதே நேரத்தில் இன்றைய டிரண்டுக்கு ஏற்ற வகையில் காட்சி அமைப்புகள் இல்லை என்பது ஒரு குறை. கிளைமாக்ஸ் காட்சியில் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க சுகன்யா கூறும் காரணம் அரதப்பழசு. பத்து வருடங்களுக்கு முன்வந்த சேரனின் ஸ்டைலில் திரைக்கதை உள்ளதால் இன்றைய இளைஞர்கள் இந்த படத்திற்கு எவ்விதமான வரவேற்பை தருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
மொத்தத்தில் திருமண வயதில் மகன், மகள் வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படம்
Comments