ராயபுரத்தில் பின்னுக்கு தள்ளிய திருவிக நகர்: மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு

கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் சென்னையில் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக சுகாதாரத்துறை திணறி வருகிறது. சென்னையில் மக்கள் தொகை அதிகம் என்ற போதிலும் சென்னை மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதும் சமூக விலகலை பின்பற்றவில்லை என்பதே கொரோனா பாதிப்பு அதிகமாவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

குறிப்பாக சென்னை ராயபுரத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது ராயபுரத்தைவிட திருவிக நகர் கொரோனாவால் அதிக பாதிப்புற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று முன்தினம் வரை 169 பேர்கள் மட்டுமே திருவிக நகரில் கொரோனா பாதித்தவர்கள் இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 41 பேர்கள் அந்த பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராயபுரத்தில் 199 பேர்களும், தேனாம்பேட்டையில் 105 பேர்களும் கோடம்பாக்கத்தில் 97 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தண்டையார்பேட்டையில் 77 பேர்களும் வளசரவாக்கத்தில் 40 பேர்களும் அம்பத்தூரில் 27 பேர்களும் அடையார் பகுதியில் 20 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கொரோனாவால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 906 என சற்று முன் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இன்று 100 பேர் பாதிக்கப்பட்டால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு மதிப்பளித்து சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவால் இருந்து மீள முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.