இந்தியாவில் கொரோனா 3 ஆவது அலை வருமா? பீதியை கிளப்பும் தகவல்!
- IndiaGlitz, [Thursday,May 06 2021]
கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியாவே திண்டாடி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் ஆங்காங்கே உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் ஆம்புலன்ஸ்களிலும் ஆட்டோக்களிலும் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது அலைக்கே இந்த நிலைமை என்றால் 3 ஆவது அலை வந்தால் எப்படி இருக்கும்.
இதுகுறித்த ஒரு அதிர்ச்சித் தகவலைத்தான் தற்போது மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் விஜயராகவன் வெளியிட்டு உள்ளார். அதாவது பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் நீடிக்கும் நிலையில் 3 ஆவது அலையும் தொடர வாய்ப்பு இருப்பதாக அவர் தகவல் வெளியிட்டு உள்ளார். மேலும் அதை தவிர்ப்பது கடினம் என்றும் இதனால் மக்கள் 3 ஆவது அலையை எதிர்க்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் நேற்று ஒரே நாளில் 4,12,262 புதிய நோய்ப் பாதிப்புகள் உருவாகி இருக்கிறது. இதைத்தவிர 3,980 பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கிய இரண்டாம் அலை கடந்த சில தினங்களிலேயே லட்சக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளத. இதனால் தற்போது கேரளாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல வரும் 12 ஆம் தேதி முதல் கர்நாடகத்திலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் 3 ஆவது அலை வந்தால் எப்படி இருக்கும்? அந்த பாதிப்புகளை எப்படி எதிர்கொள்வது என்பது போன்ற பீதி இப்போதே மக்களிடம் தோன்ற ஆரம்பித்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.