முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
11 நாட்களைக் கடந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் கடுமையான போரைத் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு மனிதாபிமான அடிப்படையில் சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்தும் போர் நிறுத்தம் தொடர்பாகவும் இருநாடுகளின் அதிகாரிகள் சார்பாக 3 ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தை- பெலாரஸ் –போலந்து எல்லையில் உள்ள பெலோவெஜ்ஸ்கயா புஷ்ச்சாவில் உக்ரைனும் ரஷ்யாவும் 3 ஆவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. முன்னதாக பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் 2 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து 3 ஆவது கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் எட்டமுடியவில்லை என்று இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் பிரதிநிதி மிக்கேய்லோ இந்தப் பேச்சுவார்த்தையில் நேர்மறையான முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அதேபோல எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்று ரஷ்யா தரப்பில் கலந்துகொண்ட விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே நடைபெறும் சண்டையை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடரும் என்றும் இதற்கு பல வாரங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதால் உக்ரைன் பகுதிகளில் போர் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு உக்ரைன் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ரஷ்ய அதிபர் புடின் முன்னதாக நிராகரித்து விட்டார் என்பதும் கவனிக்கத் தக்கது.
மக்கள் வெளியேற்றம்- மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு கார்கிவ், கிவ், மரியுபோல், சுமி ஆகிய நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழியாக பொதுமக்கள் தற்போது அண்டை நாடுகளுக்குப் பெயர்ந்து வருகின்றனர். இதுகுறித்து பேசியிருந்த ஜெலன்ஸ்கி இந்த வழித்தடம் வழியாக வெளியேறும் மக்கள் நேரடியாக பெலாரஸ் மற்றும் ரஷ்யாவிற்கே இடம் பெயரக்கூடும் எனக் கருத்துக் கூறியிருந்தார்.
ஆனால் மனிதாபிமான அடிப்படையில் மக்கள் வெளியேறுவதற்கான பாதைகள் இன்றுமுதல் செயல்பாட்டுக்கு வரும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 3 ஆவது கட்டப் பேச்சுவார்த்தையில் மக்கள் வெளியேற்றம் குறித்து மட்டுமே சிறிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் இருக்கிறது என்றும் இருநாட்டு அதிகாரிகள் சார்பாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments