முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 3வது வழக்கு: மீண்டும் கைது!
- IndiaGlitz, [Saturday,February 26 2022]
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் 2 வழக்குகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கள்ள ஓட்டு போட வந்த திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக அவர் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து கொரோனா பரவல் நேரத்தில் சாலை மறியல் செய்ததாக ஜெயக்குமார் மீது 2வது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் முதல் வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் அவர் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 3வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் ஏற்கனவே இரண்டு வழக்குகளால் சிறையில் இருக்கும் ஜெயக்குமார் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.