வயலில் இறங்கி வெங்காய அறுவடை செய்த திருடர்கள்: அதிர்ச்சியில் விவசாயி 

  • IndiaGlitz, [Wednesday,December 04 2019]

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் வெங்காயம் பயிர் செய்து இருந்த நிலையில் நேற்று இரவு நேற்று திடீரென மர்ம நபர்கள் சிலர் அவருடைய நிலத்தில் இருந்த வெங்காயத்தை அறுவடை செய்து மாயமாய் மறைந்து விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திரகுமார் என்ற விவசாயி தனக்கு சொந்தமான 1.6 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிர் செய்திருந்தார். தற்போது வெங்காய விலை உச்சத்தில் சென்று கொண்டிருப்பதால் வெங்காய அறுவடை செய்து தன்னுடைய கடன்களை எல்லாம் தீர்த்து விடலாம் என்றும் குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்கி விடலாம் என்றும் அவர் திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது நிலத்தில் வெங்காய அறுவடை செய்ய சென்றபோது ஏற்கனவே அங்கு தன்னுடைய நிலத்தில் இருந்த அனைத்து வெங்காயமும் அறுவடை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஜிதேந்திரகுமார் காவல் நிலையத்தில் செய்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்காயத் திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இரவோடு இரவாக மர்ம நபர்கள் வெங்காயத்தை வயலில் இறங்கி அறுவடை செய்து திருடி சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு டிரக் ஒன்றில் சென்று கொண்டிருந்த 40 டன் வெங்காயத்தை டிரக்குடன் மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.