இனி தமிழகத்தில் மாவட்டப் பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை!!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Saturday,July 18 2020]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இனி தமிழகத்தில் எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என தெரிவித்து இருந்தார். இதனால் சேலம் இரண்டாகப் பிரிக்கப்படுமா என்ற கேள்விக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று ஈரோட்டில் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார். அப்போது செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. செய்தியாளர்கள் சேலம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப் படுமா எனக் கேள்வி எழுப்பினர். இது முற்றிலும் தவறான தகவல். இனி தமிழகத்தில் எந்தவொரு மாவட்டமும் இரண்டாகப் பிரிக்கப்படாது என உறுதியளித்தார்.
மேலும் பெரியார் சிலை அவமதிப்பு குறித்து கேள்வி எழுப்பப் பட்டது, அதில் சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தர விட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் விளக்கம் அளித்தார். மின்சாரக் கட்டண நிர்ணயத்தில் குறைபாடு இருப்பதாக திமுக போராட்டத்தை அறிவித்து இருப்பது பற்றி கேள்வி எழுப்பட்டது. அதற்கு மின்சாரக் கட்டணத்தில் எந்த முறைகேடும் இல்லை. இதுகுறித்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருந்தார்கள். கடந்த 4 மாதமாக மின்சார ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று கணக்கு எடுக்க முடியவில்லை. இதனால் 4 மாதத்திற்கும் சேர்த்து கணக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஒருநபர் 800 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால் அதை இரண்டாகப் பிரித்து வரும் 400 ரூபாயில் 100 ரூபாய் விலக்கு அளிக்கப்படும். 400 யூனிட்டுக்கு மேல் சென்றால் அடுத்த மாதத்தில் சேர்த்துக் கொள்ளப்படும். இத்திட்டத்திற்கு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது எனவும் முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.
அடுத்து கொரோனா நோய்ப் பரவல் குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு நாட்டிலேயே தமிழகத்தில் அதிக அளவிலான கொரோனா பரிசோதானைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஊரடங்கு நேரத்திலும் தமிழகம் அதிகளவிலான முதலீடுகளை ஈர்த்து இருக்கிறது எனவும் தெரிவித்தார். அதோடு கொரோனா இறப்புக்கு வழங்கப் படுவதாகச் சொல்லப்பட்ட நிவாரணத் தொகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து அதனால் உயிரிழந்த மருத்துவ ஊழியர்கள், மருத்துவர்கள் உயிரிழந்து இருந்தால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்படும். மேலும் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். மருத்துவத் துறை அல்லாது மற்றத் துறைகள், காவல் துறை, வருவாய் துறை, உள்ளாட்சி துறை போன்ற துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளால் தமிழகத்தில் இறப்பு குறைந்து இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.