முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை.. விஜய்யை மறைமுகமாக தாக்குகிறாரா கமல்?

  • IndiaGlitz, [Wednesday,February 21 2024]

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், ’தளபதி 69’ படத்திற்கு பின் நடிக்க மாட்டேன் என்றும் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 7வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் ’முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை என்று கூறினார்.

இங்கே முழு நேர அரசியல்வாதி என்று யாரை நீங்கள் சொல்வீர்கள்? நான் ஏன் சினிமாவில் நடிக்கிறேன் என்றால் எனக்கு எல்லா வசதிகளும் நீங்கள் கொடுத்தும் நான் ஏன் அரசியல் வரவேண்டும் என்றால் உங்கள் அன்புக்கு இன்னும் கைம்மாறு செய்யவில்லை என்று அர்த்தம்.

ஏன் முழு நேர அரசியலில் இல்லை என கேட்பவர்களுக்கு நான் சொல்வது என்னவெனில் நான் செய்யும் அரசியல் என்பது நான் சம்பாதித்த பணத்தில் செய்தது என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

நான் கோவை தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு காரணம் 90 ஆயிரம் பேர் வாக்கு செலுத்த வரவில்லை. இந்தியாவில் 40% பேர் ஓட்டு போடாமல் இருக்கிறார்கள், குடிமக்கள் முதலில் முழு நேர குடிமக்களாக மாறிவிட்டு, அதன் பிறகு ஏன் முழு நேர அரசியலில் இல்லை என்று என்னை கேள்வி கேட்கலாம் என்று பதிலளித்தார்.

என்னை நான் அரசியலுக்கு வரவைப்பது கஷ்டம் என்று சொன்னார்கள், இப்போது வந்து விட்டேன், அதைவிட கஷ்டம் என்னை அரசியலில் விட்டு போக செய்வது என்பதை சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

நடிகர் விஜய் சினிமாவை விட்டு விட்டு முழுநேர அரசியலுக்கு வருவது அவரது பாணி என்றும் விஜய்யை முதன் முதலில் அரசியலுக்கு வர சொன்னது நான் தான் என்றும் கமல்ஹாசன் நினைவூட்டினார்.