வரப்போகிறது.. " SBI " ஏடிஎம் கார்டில் பணம் எடுக்க புதிய நடைமுறை..!

  • IndiaGlitz, [Saturday,December 28 2019]

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி, ஏடிஎம்-கள் மூலம் பணம் எடுக்கப் புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளது. இந்த புதிய நடைமுறையின் மூலம் ஏடிஎம்-கள் மூலம் பணம் எடுத்தலை ஒரு முறை கடவு எண் (OTP) கொண்டு செய்ய வழிவகை செய்யப்படும். முறையற்றப் பணம் எடுத்தலைத் தடுக்க இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாம்.

இது வரும் 2020 ஆம் ஆண்டு, ஜனவரி 1 ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அமல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படும் என்று எஸ்பிஐ கூறியிருக்கிறது. இந்த புதிய ஓடிபி நடைமுறை மூலம், ஏடிஎம் பணம் எடுத்தலில் மேலும் ஒரு பாதுகாப்பு அம்சத்தை எஸ்பிஐ சேர்த்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏடிஎம்களில் போலியான பணப் பரிமாற்றங்களைத் தடுக்க இந்த புதிய நடைமுறையை, வரும் ஜனவரி 1 முதல் அமல் செய்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை மூலம் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதை வைத்து பணம் எடுத்தலை செய்யலாம். இதைத் தவிர பணம் எடுத்தலில் எந்த பெரிய மாற்றங்களையும் செய்யவில்லை என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் எஸ்பிஐ ஏடிஎம்-களைத் தவிர வேறு வங்கி ஏடிஎம்-களில் அதிக பணம் எடுத்தால், இந்த புதிய நடைமுறை பொருந்தாது.