இந்தியாவில் 100- ஐ தாண்டிய ஒமைக்ரான் பாதிப்பு!

  • IndiaGlitz, [Friday,December 17 2021]

இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகர், தமிழ்நாடு என 11 மாநிலங்களில் இந்த வகை வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மத்தியச் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தென்ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் துவங்கிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் 11 மாநிலங்களில் இதுவரை பரவியிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தத் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர் பொதுமக்கள் அனைவரும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2 ஆம் தேதி கர்நாடகாவில் 2 பேருக்கு முதன் முதலில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதையடுத்து மகாராஷ்டிராவில் 32, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா 8, தெலுங்கானா 8, குஜராத் 5, கேரளா 5 மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர், மேற்குவங்க மாநிலத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார்.

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவின் ஒரு மாகாணத்தில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் இதுவரை 91 நாடுகளில் பரவியிருக்கிறது. மேலும் இதுவரை உலகம் முழுவதும் 27,042 பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 20 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக 10 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்நிலையில் 101 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.