தமிழ் தொலைக்காட்சி நடிகர் வெட்டிக்கொலை: சென்னையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,November 15 2020]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜாக்குலின் நடித்து வரும் தொலைக்காட்சித் தொடர் தேன்மொழி. இந்த தொடரில் துணை நடிகராக நடித்த நடிகர் ஒருவர் இன்று அதிகாலை சென்னையில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தேன்மொழி என்ற தொடரில் துணை நடிகராக நடித்து வந்தவர் செல்வரத்தினம். சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள வள்ளல் பாரி என்ற தெருவில் வசித்து வந்த இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் செல்வரத்தினம் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோவில் வந்த நான்கு பேர்கள் செல்வரத்தினம் வீட்டு வாசலிலேயே கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் செல்வரத்தினத்தை வெட்டி கொலை செய்தனர்

சம்பவ இடத்திலேயே செல்வரத்தினம் உயிரிழந்ததை அடுத்து கொலையாளிகள் 4 பேரும் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் செல்வரத்தினம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

செல்வரத்தினம் தொலைக்காட்சி நடிகராக மட்டுமின்றி ரியல்எஸ்டேட் உள்ளிட்ட வேலையும் செய்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

தமிழ் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் அதிகாலையில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது