பார்க்காமல் நிகழ்ந்த ஃபேஸ்புக் காதல்: பார்த்தவுடன் ஏற்பட்ட விபரீதம்!
- IndiaGlitz, [Saturday,November 30 2019]
ஃபேஸ்புக்கில் ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஏற்பட்ட காதலுக்கு பின், காதலர்கள் நேரில் சந்தித்தபோது ஏற்பட்ட விபரீதத்தால் தேனி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தேனி மாவட்டத்தை சேர்ந்த அசோக் குமார் என்ற இளைஞர் மும்பையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவர் ஃபேஸ்புக் மூலம் மலேசியாவை சேர்ந்த அமுதா என்பவருடன் நட்பாக பழகினார். இந்த நட்பு ஒரு சில நாட்களில் காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்
புகைப்படத்தில் அழகாகவும் நிறைய நகைகளை அமுதா போட்டு இருந்ததை பார்த்து உருகி உருகி அசோக்குமார் காதலித்த நிலையில், இருவரும் சந்திக்க முடிவு செய்தனர். இந்த நிலையில் புகைப்படத்தில் இருந்த அமுதா என்பவர் தேனிக்கு நேரில் வந்தபோது, காதலியை காண மிகுந்த ஆர்வத்துடன் இருந்த அசோக்குமாருக்கு நேரில் அவரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். குண்டாகவும் வயது அதிகமாகவும் தெரிந்ததால் தான் எதிர்பார்த்தபடி காதலி இல்லை என்று அவர் அதிர்ச்சி அடைந்து காதலுக்கும் முற்றுப்ப்புள்ளி வைத்தார். போட்டோஷாப் மூலம் அமுதா தனது புகைப்படத்தை மாற்றியுள்ளார் என்பது அதன்பின்னர் தான் தெரிந்தது
இதனை அடுத்து அமுதாவின் காதலை தொடர விரும்பாத அசோக்குமார் அவரை தவிர்த்து வந்தார். ஆனால் தன்னை ஏற்க மறுத்த அசோக்குமார் மீது ஆத்திரம் அடைந்த அமுதா மலேசியா சென்று தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். அதன்பின் அமுதாவின் சகோதரி பேசுவதாகவும் காதலை மறுத்ததால் அமுதா தற்கொலை செய்து கொண்டதாகவும் போன் செய்து அசோக் குமாருக்கு மிரட்டல் விடுத்தார்.
இதனால் அசோக்குமார் அதிர்ச்சி அடைந்து அமுதாவின் சகோதரியை நேரில் அழைத்து சமாதானப்படுத்த திட்டமிட்டார். தேனி வருமாறு அமுதாவின் தங்கைக்கு அழைப்பு விடுத்த நிலையில் தேனியில் அவரது தங்கையை பார்க்க சென்ற அசோக்குமாருக்கு மீண்டும் அதிர்ச்சி காத்து இருந்தது. ஏனென்றால் வந்திருந்தவர் அமுதா தான். தங்கை போல குரலை மாற்றிப் பேசி அவர் மிரட்டல் விடுத்தது அப்போது தெரியவந்தது
இதனையடுத்து அமுதாவின் காதலை ஏற்க அசோக் குமார் மறுத்ததை அடுத்து அமுதா போலீசில் புகார் அளித்தார். போலீசார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அமுதாவுக்கு அறிவுரை கூறினர். அசோக்க்குமார் காதலை ஏற்க மறுத்ததால் அவரை கொல்ல திட்டமிட்டு கூலிப்படையை அணுகியுள்ளார். கூலிப்படையினர் அசோக்குமாரை கடத்த திட்டமிட்டு ஒரு காரில் காத்திருந்தபோது தற்செயலாக அந்த காரில் இருப்பவர்களை சந்தேகம் கொண்ட போலீசார் விசாரணை செய்தபோது அசோக்குமாரை கொலை செய்ய காத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களை அனுப்பிய அமுதாவை தேடி வருகின்றனர். சரியான நேரத்தில் போலீசார் கூலிப்படைகளை கைது செய்யவில்லை என்றால் அசோக்குமார் கொலை செய்யப்பட்டிருப்பார்.
பார்க்காமல் செய்த ஃபேஸ்புக் காதலால் பெரும் விபரீதம் ஏற்பட்ட சம்பவம் தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது