டிக் டாக் வீடியோ.. ஒட்டுமொத்தமாக போய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த கிராமம்..!
- IndiaGlitz, [Friday,February 14 2020]
டிக்டாக் வீடியோவால், தேனி பி.சி.பட்டி காவல் நிலையத்திற்கு கிராம பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டுவந்து புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், சுகந்தி. இவர், தனது சகோதரியுடன் சமீபத்தில் டிக்டாக் செயலியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நபர் ஒருவர், சுகந்தி மற்றும் அவரது சகோதரியை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
அதில், சுகந்தி மற்றும் அவரது சகோதரியைக் கடுமையான வார்த்தைகளால் பேசியது மட்டுமல்லாமல், நாகலாபுரம் கிராமப் பெண்களைத் தகாத வார்த்தைகளால் பேசி விமர்சனம் செய்கிறார். இந்த வீடியோ வெளியானதால், கோபமடைந்த நாகலாபுரம் கிராமப் பெண்கள், நேற்று பி.சி.பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கத் திரண்டனர். வீடியோ வெளியிட்ட நபர்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், அவரைக் கைதுசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதுதொடர்பாக பேசிய நாகலாபுரம் கிராமப் பெண்கள் சிலர், ''கட்டுப்பாடு மிக்க கிராமம் நாகலாபுரம். இப்படி டிக்டாக் வீடியோவால் கிராமத்துக்கு அவப்பெயர் விளைவிக்கிறார்கள். ஏற்கெனவே, டிக்டாக் வீடியோ சர்ச்சையில் சிக்கியவர், சுகந்தி. சுகந்திக்கும் அந்த நபருக்கும் தனிப்பட்ட பிரச்னைகள் இருக்கலாம். அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. உங்கள் இருவரது பிரச்னைக்கு நடுவே, ஒட்டுமொத்த கிராமப் பெண்களையும் இழிவாகப் பேசுவது தவறு. இனியும் இதை சும்மா விடக்கூடாது என்பதற்காகத்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறோம்” என்று கொதித்தனர்.