கல்லா பெட்டியில் கைவைக்காமல் வெங்காயத்தை மட்டும் திருடிய திருடர்கள்
- IndiaGlitz, [Thursday,November 28 2019]
நகைக் கடைகளில் திருடுபவர்கள் கல்லாப்பெட்டியை கண்டுகொள்ளாமல் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடுவதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதேபோல் சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு காய்கறி கடையில் கல்லா பெட்டியில் ரூபாய் 50,000க்கும் மேல் இருந்தும் அதன் மீது கை வைக்காமல் அங்கிருந்த வெங்காய மூட்டைகளை மட்டும் திருடர்கள் திருடி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுதஹாதா என்ற பகுதியில் அக்சயதாஸ் என்பவர் காய்கறி கடை ஒன்றை வைத்துள்ளார். இவர் வழக்கம்போல் நேற்று காலை தனது கடையை திறந்தபோது வெங்காய மூட்டைகள் சிதறி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே கடையை சோதனை செய்தபோது ஒரு சில வெங்காய மூட்டைகள் திருடு போயிருப்பது தெரிந்தது
இதனை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்து கல்லாபெட்டியில் உள்ள பணமும் திருடு போய் இருக்குமோ என்ற சந்தேகத்துடன் கல்லாபெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ஒரு பைசா கூட குறையவில்லை. எனவே திருட வந்தவர்கள் வெங்காயத்தை மட்டுமே குறிவைத்து திருடி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. திருடுபோன வெங்காயத்தின் மதிப்பு ரூபாய் 50,000 என தெரிகிறது.
கல்லாப் பெட்டியில் ஆயிரக்கணக்கில் பணம் இருந்தும் அதில் கை வைக்காமல் வெங்காயத்தை மட்டும் திருடர்கள் திருடி சென்றுள்ளது கடைக்காரருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் வெங்காய திருடனை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது
வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உச்சத்தை சென்று கொண்டிருக்கும் நிலையில் தங்க நகை கடைக்காரர்கள்போல் இனி வெங்காய வியாபாரிகளும் பாதுகாப்புக்கு செக்யூரிட்டிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை