தீரன் அதிகாரம் ஒன்று: காவல்துறையை கண்ணியப்படுத்தும் கச்சிதமான படம்
ஏற்கனவே 'சிறுத்தை' படத்தில் போலீஸ் கேரக்டருக்கு பொருத்தமானவர் கார்த்தி என்று நிரூபித்த நிலையில் மீண்டும் அவர் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் படம், சதுரங்க வேட்டை படத்தை வித்தியாசமான படமாக கொடுத்த இயக்குனர் வினோத்தின் அடுத்த படம், உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படம் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'தீரன் அதிகாரம் ஒன்று', உண்மையில் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை பார்ப்போம்
தமிழகத்தின் புறநகர் பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளில் முன்கூட்டியே நோட்டம் பார்த்து, வீட்டில் உள்ளவர்களை கொடூரமாக கொலை செய்து கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்கும் வழக்கு காவல்துறை பயிற்சி முடித்து புதியதாக களமிறங்கும் காவல்துறை அதிகாரி கார்த்தி கையில் வருகிறது. கைரேகையை தவிர எந்தவித தடயமும் இல்லாத இந்த வழக்கை அவர் எப்படி கையாள்கிறார் என்பதும் இந்த வழக்கினால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், சொந்த இழப்புகளையும் தாண்டி குற்றவாளியை எப்படி பிடிக்கின்றார் என்பதே கதை. இந்த கதை கடந்த 1995ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடந்த ஒருசில கொலைகளை அடிப்படையாக வைத்து பின்னப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரி கேரக்டருக்கு மிகப்பொருத்தமாக பொருந்துகிறார் கார்த்தி. ஒரு உண்மையான இளம் அதிகாரியிடம் உள்ள சுறுசுறுப்பு, மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற அக்கறை, உயரதிகாரிகளின் நன்மதிப்பையும் அவமானத்தையும் பெறுவது, சின்ன சின்ன விஷயத்தை கொண்டு குற்றவாளியை எப்படி நெருங்குவது என்பதை விளக்குவது, குறிப்பாக எறும்பை வைத்து பிணத்தை கண்டுபிடிப்பது, குற்றவாளி விட்டுப்போன கத்தியை எப்படி பிடிக்க வேண்டும் என்று விளக்குவது, ராகுல் ப்ரித்திசிங்குடன் காதல் என கார்த்தி தனது கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்சன் காட்சிகளில் போலித்தனம் இல்லாமல் இருப்பதால் காட்சியுடன் ஒன்றிவிட முடிகிறது.
ஆரம்பம் வரை முடிவு வரை விறுவிறுப்பாக செல்லும் இந்த படத்தில் காதல் காட்சிகள் தேவையா என்று எண்ண தோன்றுகிறது. ஆனால் ராகுல்ப்ரித்திசிங் காதல் காட்சிகள் மிக இயல்பாக ரசிக்கும்படியாக இருப்பது ஒரு ஆறுதல். ராகுலின் சின்னச்சின்ன குறும்புகள், விளையாட்டுத்தனம், சேட்டை ஆகியவை ரசிக்கும்படி உள்ளது. ஆனால் படத்தின் கதைக்கு இவர் தேவையில்லை என்பதால் நல்லவேளையாக முதல்பாதியின் இறுதியில் ராகுலை கோமாவில் படுக்க வைத்து இரண்டாம் பாதியில் அவர் இல்லாமல் பார்த்து கொள்கிறார் இயக்குனர்
வடமாநில கொள்ளையர் வேடத்தில் கனகச்சிதமாக பொருந்துகிறார் அபிநயசிங். கண்களில் உள்ள குரூரம் திகிலை வரவழைக்கின்றது. கார்த்திக்கு உதவி செய்யும் அதிகாரியாக போஸ்வெங்கட், நாயகியின் தந்தையாக மனோபாலா உள்ளிட்டோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். சத்யன் ஒருசில காட்சிகளில் மட்டும் தோன்றி சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்கிறார்.
இயக்குனர் வினோத், கச்சிதமான திரைக்கதையில் மட்டுமின்றி, அதை படமாக்குவதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். குறிப்பாக கதை நடப்பது 1995ஆம் ஆண்டு என்பதால், அந்த ஆண்டுகளில் உள்ள செல்போன்கள், போலீஸ் வாகனங்கள், உள்பட யதார்த்தமாக படமாக்கியுள்ளார். வடமாநில கொள்ளையர்கள் தமிழகத்தை தேர்வு செய்தது ஏன், அவர்களுடைய பின்னணி என்ன, பிரிட்டிஷார் காலத்திலும், அவர்களுடைய காலத்திற்கு முன்பும் அவர்களுடைய வேலை என்ன? என்பது உள்பட பல விஷயங்களை ஆராய்ந்து, தகவல்களை திரட்டி காட்சிகளில் உருவகப்படுத்தியதில் இருந்து இயக்குனர் வினோத் கடுமையாக இந்த படத்தின் திரைக்கதைக்காக உழைத்துள்ளார் என்பது தெரிகிறது. பொதுமக்கள் வீடுகளில் கொள்ளையடிக்கும்போதும், கொல்லப்படும்போது காட்டாத அக்கறையை, எம்.எல்.ஏ ஒருவரின் வீட்டில் கொள்ளை, கொலை நடந்த பின்னர் காவல்துறை சுறுசுறுப்படையும் எதார்த்ததையும் அவர் சுட்டிக்காட்ட தவறவில்லை. கொள்ளையர்கள் மறைந்திருக்கு தாக்கும் யுக்தியை கடைபிடித்து போலீசாரை கொலை செய்ய முயற்சிக்கும்போது, அந்த யுக்தியையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் கார்த்தியின் அதிபுத்திசாலித்தனமான யுக்தி இயக்குனரின் டச் காட்சிகள். மேலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய இன்னொரு பலம் வசனங்கள். பொதுமக்கள் செத்தா கவலைப்பட மாட்டீங்க, ஒரு போலீசோ, அரசியல்வாதியோ செத்தால் அப்புறம் இந்த கேஸ் சுறுசுறுப்பாயிடும், பவர்ல்ல இருக்குறவன் உயிருக்கு கொடுக்குற மரியாதையை பப்ளிக் உயிருக்கு ஏன் கொடுப்பதில்லை, கெட்டவங்க கிட்டயிருந்து நல்லவங்களை காப்பாத்துற போலீஸ் வேலையை விட்டுட்டு, நல்லவங்ககிட்ட இருந்து கெட்டவங்கள காப்பாத்தற அடியால் வேலைதான சார் பார்த்துகிட்டு இருக்கோம்' போன்ற வசனங்கள் சமூக அவலங்களை பளிச்சிடுகின்றது.
சத்யன் சூரியனின் கேமிரா, ராஜஸ்தான் மணல், புழுதியை தியேட்டருக்குள்ளேயே கொண்டு வந்துவிடுவது போன்ற ஒரு உணர்வு. குறிப்பாக இரண்டு பேருந்துகளுக்கு நடுவில் தொங்கி வரும் குற்றவாளியை கார்த்தியும், காவல்துறையினர்களும் காப்பாற்றி, கைது செய்யும் காட்சியில் ஒளிப்பதிவு அபாரம்.
சிவநந்தீஸ்வரனின் படத்தொகுப்பு கச்சிதம். திலீப் சுப்பராயனின் ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கின்றது. இசையமைப்பாளர் ஜிப்ரான், இந்த படத்திற்கு பாடல்களை விட பின்னணி இசை முக்கியம் என்பதை உணர்ந்து கடுமையாக உழைத்துள்ளார். குறிப்பாக கொள்ளையர்களை பிடிக்க சேசிங் செய்யும் ஒவ்வொரு காட்சிகளுக்கும் இவருடைய பின்னணியால் உயர் கொடுக்கப்படுகிறது. நாமே தியேட்டரை விட்டு எழுந்து அந்த கொள்ளையரை விரட்டலாம் என்ற அளவுக்கு அசத்தலான பின்னணி
இந்த படத்தின் குறை என்று பார்த்தால் ராகுல்ப்ரித்திசிங் காட்சிகளை இன்னும் குறைத்திருக்கலாம். முதல் பாதியின் விறுவிறுப்பை காதல் காட்சிகள் குறைக்கின்றது. குறிப்பாக பரிட்சைக்கு படிக்காமல் ராகுல் மட்டம் போடும் காட்சிகள், மகளுக்கு டியூஷன் சொல்லி கொடுக்க எதிர்வீட்டு பையன் கார்த்தியிடம் மனோபாலா கேட்பது, இரண்டாம் பாதியில் தேவையில்லாத ஒரு குத்துப்பாட்டு போன்ற ஒருசில காட்சிகளை கூறலாம்.
மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான க்ரைம் படத்தை மிக கச்சிதமாக, சமரசம் அதிகமின்றி, கடின உழைப்புடன் கொடுத்த படக்குழுவினர்களை தாராளமாக பாராட்டலாம். பொதுமக்களை பாதுகாக்க உயிரை துச்சமாக மதித்து செயல்படும் காவல்துறை அதிகாரிகளை கண்முன் நிறுத்தும் படம் என்பதால் கார்த்தி ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் பார்க்கும் படமாக உள்ளது.
நிச்சயமாக இந்த வருடத்தின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று
Comments