தொடர் தோல்வி எதிரொலி: மகிழ்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள்
- IndiaGlitz, [Saturday,June 20 2020]
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த மூன்று மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் ஆபத்பாந்தவனாய் திடீரென ஓடிடியில் ரிலீஸ் செய்யும் வாய்ப்பு தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தது. இதனை அடுத்து சமீபத்தில் தமிழ் உள்பட ஒருசில மொழி திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபம் இல்லையென்றாலும் முதலீடாவது தேறியது என்று சந்தோஷப்பட்டனர்.
ஆனால் ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. புதிய திரைப்படங்களை மட்டுமே நம்பி இருக்கும் திரையரங்குகளில் தலையிடாமல் திரைப்படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் ஒரு சில திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் ரெட் கார்டு விதிக்கவும் முடிவு செய்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஒருசில படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒடிடி நிறுவனங்களுக்கு போட்ட காசே வருமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஓடிடியில் ரிலீஸான படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது மட்டுமின்றி ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதால் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடபடாமல் இருப்பதே நல்லது என்று திரையரங்க உரிமையாளர்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது
மேலும் திரையரங்குகளில் படங்கள் ரிலீசாகும்போது முதல் நாளில் சாதாரண பிரிண்டும், மூன்றாவது நான்காவது நாளில் தான் ஹெச்டி பிரிண்டும் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியாகும். ஆனால் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள், ரிலீஸ் ஆன அடுத்த ஒரு சில நிமிடங்களில் ஹெச்டி பிரிண்ட் வெளிவருவதால் ஓடிடியில் காசு கொடுத்து படம் பார்ப்பதை தவிர்க்கும் ரசிகர்கள் திருட்டு இணைய தளங்களில் படம் பார்ப்பதால் ஓடிடி நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது
மேலும் ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் படம் சரியில்லை என்றால் பாஸ்ட் பார்வர்டு செய்து படத்தை பார்ப்பதால் ஒரு படைப்பாளனின் முழு படமும் ரசிகர்களை சென்று சேர்வதில்லை என்ற பலவீனமும் இதில் உள்ளது. எனவே என்னதான் திரையரங்குகளில் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருந்தாலும் திரையரங்கில் பார்க்கும் அனுபவத்திற்கு ஈடு-இணையே இல்லை என்பதுதான் இப்போதைய கருத்தாக உள்ளது. எனவே திரையரங்கிற்கு மாற்று ஓடிடி என்ற மாயை கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருவதாக கூறப்படுகிறது