விஷால் அதிரடி அறிவிப்பு எதிரொலி: திரையரங்க உரிமையாளர்கள் அவசர கூட்டம்
- IndiaGlitz, [Friday,October 13 2017]
திரையரங்கு கட்டண உயர்வு, ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ஆகியவை காரணமாக திரைப்படம் பார்க்க வரும் பாமர ரசிகர்கள் ஒரு படம் பார்க்க நபர் ஒன்றுக்கு ரூ.300க்கும் மேல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி மணிக்கணக்கில் பார்க்கிங் கட்டணம், தண்ணீர் பாட்டில் உள்பட தின்பண்டங்களின் கொள்ளை விலை ஆகியவற்றையும் படம் பார்ப்பவர்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் இன்று காலை அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணம், அரசு நிர்ணயித்த பார்க்கிங் கட்டணம், அம்மா தண்ணீர் பாட்டில் விற்பனை உள்பட ஒருசில விஷயங்களை அவர் தெரிவித்தார். இதனை மீறும் திரையரங்குகள் மீது அரசிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
விஷாலின் இந்த அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மல்டிஃபிளக்ஸ் உட்பட அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் பங்கேற்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் விஷாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது,.