புயல் காரணமாக கனமழை: தமிழகத்தில் இன்று திரையரங்குகள் மூடப்படுகிறதா?
- IndiaGlitz, [Saturday,November 30 2024]
வங்கக் கடலில் தோன்றிய புயல் இன்று சென்னை அருகே கரையை கடக்க இருப்பதை அடுத்து, சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், போக்குவரத்து மிகவும் குறைவாக உள்ளது என்றும், வாகன ஓட்டிகள் அவஸ்தைப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில தனியார் நிறுவனங்களும் வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கனமழை காரணமாக இன்று திரையரங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ஒரு நாள் திரையரங்குகள் இயங்காது என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று வண்டலூர் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களும் மூடப்படும் என்றும், சென்னை மெரினா கடற்கரையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் இந்த நேரத்தில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். புயல் கரையை கடக்கும் நேரத்தில் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.