முதல்வரை சந்திக்கும் திரையரங்க உரிமையாளர்கள்: ஆயுதபூஜையன்று தியேட்டர்கள் திறக்கப்படுமா?
- IndiaGlitz, [Tuesday,October 20 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன என்பது தெரிந்ததே. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையரங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்
இந்த நிலையில் கடந்த 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவை உள்பட பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன
இந்த நிலையில் தமிழகத்திலும் திரையரங்குகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதல்வரை நேரில் சந்திக்கவும் திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வரை தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்து பேசுகின்றனர். அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வரை சந்திக்க இருப்பதாகவும் வரும் ஆயுத பூஜை அன்றே திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த சந்திப்பு முடிவடைந்ததும் தமிழக அரசிடமிருந்து திரையரங்குகள் திறப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது