ஓடிடி விஷயத்தில் முக்கிய முடிவெடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..!
- IndiaGlitz, [Tuesday,February 20 2024]
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார், இந்த பேட்டியில் அவர் கூறிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
இந்தி படங்கள் 8 வாரங்களுக்குப் பிறகு தான் ஓடிடியில் வெளியிடப்படுகிறது. தமிழ் சினிமாவிலும் இனிமேல் ஓடிடி வெளியீட்டை 8 வாரமாக மாற்ற வேண்டும்
திரையரங்குகளுக்கு உள்ளாட்சி வரி 8 சதவீதம் விதிக்கப்படுவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
அதேபோல் பிற மாநிலங்களில் திரையரங்குகளில் கிரிக்கெட், ஃபுட்பால் போன்றவற்றை ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது போல், தமிழகத்திலும் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி அளிக்க வேண்டும்.
திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைப்பது குறித்து தயாரிப்பாளர்களும் பேசி முடிவெடுப்போம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்க தயார். ஆனால் சிறு படங்களை பார்க்க மக்கள் வருவதில்லை.
தமிழகத்தில் உள்ள 1168 திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பது புகார் உள்ளது. ஆனால் மற்ற திரையரங்குகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்.
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த தீர்மானங்கள் காரணமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.