கொரோனா பாதித்த நபர்களிடம் இளம் நடிகை விடுத்த முக்கிய வேண்டுகோள்!
- IndiaGlitz, [Friday,April 30 2021]
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உருவான கொரோனா வைரஸ் ஒன்றரை வருடத்தைக் கடந்த பின்பும் இன்னும் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவில் சுகாதாரக் கட்டமைப்பு முழுவதும் சீர்குலைந்து மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு எனப் பல இன்னல்களைச் சந்தித்து வருகிறோம்.
இந்நிலையில் கொரோனா சிகிச்சையின் வரப்பிரசாதமாகக் கருதப்படும் பிளாஸ்மா சிகிச்சை குறித்தும் பிளாஸ்மா நன்கொடை குறித்து இளம் நடிகை பிரணிதா தனது இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தயைக் கூர்ந்து பிளாஸ்மா நன்கொடையை அளிக்க முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு கொரோனாவில் இருந்து மீண்ட பின்பு குறைந்தது 4 வாரங்கள் கழித்தப் பின்பு அடுத்த 6 மாதத்திற்குள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு 18-65 வயதிற்கு உட்பட்ட எல்லோரும் இந்த நன்கொடையை அளிக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். தமிழில் நடிகை பிரணிதா பல படங்களில் நடித்து இருந்தாலும் நடிகர் கார்த்திக்குடன் நடித்த “சகுனி’‘ படத்தின் மூலம் பெரிய வரவேற்பை பெற்றார். ஆனால் தொடர்ந்து தமிழில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்காத இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை, அதோடு கன்னடம், தற்போது பாலிவுட் என ரவுண்டு கட்டி முன்னணி நட்சத்திரங்களோடு நடித்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் போட்டபோது தொழிலாளர்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்து அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் தினமும் ஒரு லட்சம் பேருக்கு சாப்பாடு கொடுப்பது என்ப பல்வேறு நற்காரியங்களை செய்து வந்தார். அதோடு கொரோனா நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் குறித்தும் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் வழியாக வலியுறுத்தி வந்தார்.
இப்படி கொரோனா நேரத்தில் ஏழை மக்களுக்கு கைக்கொடுத்த நடிகை பிரணிதா தற்போது கொரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கும் பிளாஸ்மா நன்கொடை குறித்தும் மனம் திறந்து இருக்கிறார். இவரது இன்ஸ்டா பதிவை பார்த்து ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதோடு நடிகை பிரணிதாவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.