உலகின் முதல் சொகுசு தியேட்டர்: அபிராமி ராமநாதனின் மெகா திட்டம்

  • IndiaGlitz, [Wednesday,September 25 2019]

சென்னையின் முக்கிய திரையரங்க வளாகங்களில் ஒன்றான அபிராமி திரையரங்கில் ஏற்கனவே பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ள நிலையில் தற்போது நான்கு தியேட்டர்களுடன் கூடிய அபார்ட்மெண்ட் கட்டிடம் ஒன்றை அபிராமி ராமநாதன் கட்டி வருகிறார்.

இந்த நான்கு தியேட்டர்களில் ஒரு தியேட்டர் உலகில் முதல்முறையாக சொகுசு தியேட்டராக மாறவுள்ளது. இந்த தியேட்டரில் மொத்தமே 60 சீட்டுக்கள் மட்டுமே இரண்டு இரண்டாக இருக்கும். படுத்து கொண்டே படம் பார்க்கலாம். ஒவ்வொரு சீட்டுக்கும் இடையே 3 அடி இடைவெளி இருக்கும். இந்த தியேட்டரில் டிக்கெட் முன்பதிவு செய்தால் பிக்கப் செய்யவும் டிராப் செய்யவும் கார் வரும். சொந்த காரில் வருபவர்களுக்கு பார்க்கிங் வசதி செய்து தரப்படும்.

மேலும் இடைவேளையின்போதோ, படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே பாப்கார்ன், பெப்சி, கோக் போன்ற ஸ்னாக்ஸ்களை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். அதற்கென தனிக்கட்டணம் கிடையாது. அதுமட்டுமின்றி இடைவேளையின்போது ஃபொபே டின்னர் அல்லது ஃபொபே லஞ்ச் உண்டு. படம் பார்க்க குழந்தைகளுடன் வருபவர்களுக்கு குழந்தைகள் விளையாட தனி இடம் உண்டு. படம் பார்த்து முடிக்கும்வரை குழந்தையை பாதுகாப்பை பார்த்து கொள்ள ஆட்கள் உண்டு.

இதுபோக பிறந்த நாள் உள்பட விசேஷங்களுக்கு மொத்தமாக 60 சீட்டுக்களையும் புக் செய்வோர்களுக்கு அவர்களுக்கு தேவையான உணவு பரிமாறப்படும். மேலும் அவர்கள் எந்த திரைப்படத்தை விரும்பினாலும், அந்த திரைப்படம் திரையிடப்படும். இதற்கென அரசிடம் அனுமதி பெற்ற சிறப்புக்கட்டண டிக்கெட் விலை நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். இந்த தியேட்டரில் படம் பார்க்கும் அற்புதமான அனுபவத்தை விரைவில் சென்னை ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது.