உலகின் முதல் மருத்துவமனை எக்ஸ்பிரஸ் ரயில்: இந்தியன் ரயில்வே அசத்தல்
- IndiaGlitz, [Friday,August 30 2019]
நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அதிநவீன சிகிச்சையை அளிக்கும் உலகின் முதல் மருத்துவ எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கியது. லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இந்த ரயில் நேற்று மும்பையில் இருந்து கிளம்பியது. இந்த ரயில் மருத்துவ வசதி கிடைக்காத ஏழை, எளிய மக்களுக்காக கிராமங்கள் வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது
கிராமத்தில் உள்ள நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் வெகுதூரத்தில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நேரிடும் நிலை இனி இல்லை. இந்த மருத்துவ ரயில் வரும் நேரத்தில் நோயாளிகள் அதிநவீன சிகிச்சையை பெற்று கொள்ளலாம். இந்த ரயிலில் அறுவை சிகிச்சை உள்பட அனைத்து வகை சிகிச்சை வசதிகளும் கிடைக்கும்
ஐந்து ஆபரேசன் டேபிள் உள்பட இரண்டு ஆபரேசன் தியேட்டர்கள் கொண்ட இந்த மருத்துவ ரயிலில் உலக தரத்தில் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிற்கும் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் அந்த பகுதியில் உள்ள சுமார் 8000 பேர்களுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், காது, கண் கோளாறுகள் முதல் மார்பக புற்றுநோய் வரை அனைத்து வகை சிகிச்சைகளுக்கும் இனி நவீன சிகிச்சையை இருக்கும் இடத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம் என்பதே இந்த மருத்துவ ரயிலின் சிறப்பு