தாலிபான்கள் கண்ணில் மண்ணைத் தூவிய சிறுமி… காலம் கடந்தும் வைரலாகும் தகவல்!
- IndiaGlitz, [Thursday,August 26 2021]
ஆப்கானிஸ்தான் என்றாலே தாலிபான்கள், அங்கு பெண்களுக்கான தனி சுதந்திரம் இருக்காது என்பது உலகம் முழுக்க தெரிந்த கதைதான். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை தங்களது பிடிக்குள் சிக்க வைத்துள்ளனர்.
இதனால் பதறிப்போன பெண்கள் எப்படியாவது நாட்டை விட்டு தப்பித்துவிட வேண்டும் என நினைத்து காபூல் விமான நிலையத்தில் மணிக்கணக்காக காத்து கிடக்கின்றனர். இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் நாடியா குலாம் (Nadia Ghulam) எனும் ஆப்கானிஸ்தான் பெண்மணி ஒருவரைப் பற்றி மீடியாக்கள் விவாதித்து வருகின்றன.
காரணம் தாலிபான்கள் ஆட்சி கொடூரமாக இருந்த காலத்தில் நாடியா குலாம் சுதந்திரமாக வாழ ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் பெண் என்பதால் ஒட்டுமொத்த குடும்பச் சுமையும் இவர்மீது விழுந்ததோடு படிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. கூடவே வெளியே சென்று வருவதிலும் சிக்கல். இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என நினைத்த நாடியா தன்னுடைய 11 வயதில் ஒரு ஆணைப்போல வேடம் அணியத் துவங்கி விட்டார்.
இப்படி ஆணைப்போல வேடம் அணிந்து பலமுறை வெளியே சென்று வந்திருக்கிறார். இதில் பலமுறை தாலிபான்களிடம் சிக்கியும் இருக்கிறார். ஆனால் வேடத்தை கணக்கச்சிதமாக போட்ட இவர் நாசூக்காக அவர்களிடம் இருந்து தப்பித்து இருக்கிறார். இப்படியே கிட்டத்தட்ட 10 வருடங்கள் தாலிபான்களை ஏமாற்றிய நாடியா ஒருவழியாக NGO ஒன்றின் உதவியோடு அங்கிருந்து தப்பித்துத் தற்போது ஸ்பெயின் நாட்டில் அகதியாக வசித்து வருகிறார்.
தற்போது தாலிபான்களை நினைத்து ஒட்டுமொத்த உலகமும் பீதியை வெளியிட்டு வரும் இந்தத் தருணத்தில் நாடியா குலாம் எனும் அசாத்திய பெண்ணைப் பற்றியும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. நாடியா தன்னுடைய கதையை பிரபல எழுத்தாளர் ஆக்னஸ் ரோட்ஜருன் என்பவேரோடு இணைந்து எழுதியுள்ளார். இதைவைத்து ஏராளமான ஆவணப்படங்களும் எடுக்கப்பட்டு உள்ளன.