மீண்டும் இணையும் 'ராட்சசன்' கூட்டணி.. உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்..!

  • IndiaGlitz, [Monday,June 12 2023]

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த த்ரில் கதை அம்சமுள்ள படங்களில் ஒன்று ’ராட்சசன்’ என்பதும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை அடுத்து இயக்குனர் ராம்குமார் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேறு எந்த படத்தையும் இயக்காத நிலையில் தற்போது அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

இந்த நிலையில் ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் ஒரு லவ் ஸ்டோரி கலந்த த்ரில் படம் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ’ராட்சசன்’ கூட்டணியான விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் மீண்டும் இணைய இருப்பதை பிரபல தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் உறுதி செய்துள்ளது.

‘முண்டாசுப்பட்டி’ ’ராட்சசன்’ ஆகிய இரண்டு தரமான திரைப்படங்களை அடுத்து மீண்டும் இந்த வெற்றி கூட்டணியின் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் இணையும் படம் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.