எங்க அறிக்கையில் தெரியும்… மக்கள் தீர்ப்பே இறுதியானது! முதல்வரின் அதிரடி விளக்கம்!
- IndiaGlitz, [Saturday,March 13 2021]
தமிழக எதிர்க்கட்சியான திமுக தற்போது தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கை குறித்து செய்தியாளர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பி இருந்தனர். அந்த கேள்விக்கு பதில் அளித்த தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கைக்கு முன்பாகவே தமிழக மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது.
இத்திட்டங்கள் அனைத்தும் தேர்தலை நோக்கமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டவை அல்ல. கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டே பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்ட அதிமுக அரசு பயிர்க்கடனை தள்ளுபடி செய்துள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். நான் தேர்தல் அறிக்கை எதுவும் படிக்கவில்லை. எங்கள் தேர்தல் அறிக்கை விரைவில் வெளிவரும். அந்த அறிக்கை முழுக்க முழுக்க தமிழக மக்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டே வடிவமைக்கப்படும் எனக் கூறினார்.
அதோடு கருத்துக் கணிப்பு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். தற்போது வெளிவரும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுகவிற்கு சாதகமாக இருக்கிறதே என்ற கேள்விக்கு கருத்துக் கணிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கும், கடந்த இடைத் தேர்தலிலும் அதிமுகவைக் குறித்து இப்படித்தான் செய்திகள் வெளியாகின. ஆனால் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக அபார வெற்றி பெற்றது. அதையும் நினைவுப்படுத்த வேண்டியுள்ளது.
எனவே கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஒரு விளக்கத்துக்குத்தான். மக்கள்தான் இறுதியான தீர்ப்பை வழங்குவார்கள். மக்கள் விரும்பும் அரசுதான் ஆட்சி அமைக்க முடியும். அதிமுகவை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.