எதிரிக்கு எதிரி நண்பன்… சீனாவை கண்காணிக்க இந்தியாவிற்கு உதவும் வல்லரசு நாடு…
- IndiaGlitz, [Wednesday,December 23 2020]
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை கடந்த மார்ச் முதலே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மே 25 ஆம் தேதி நடைபெற்ற கல்வான் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதே இந்த அசம்பாவிதம் நடந்தது. இதனால் இருநாடுகளின் உறவுகளிலும் பெரும் விரிசல் ஏற்பட்டு அது பொருளாதாரத்திலும் பிரபதிபலிப்பை ஏற்படுத்தியது.
மேலும் ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உள்ள நிலப்பரப்பிலும் இந்திய-சீனப் பிரச்சனை எதிரொலிக்க ஆரம்பித்தது. இதனால் இந்தப் பிரச்சனையை தீர்க்க நான் இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உதவிக்கரம் நீட்ட வந்தார். ஆனால் இதை இந்திய அரசு விரும்பவில்லை. இந்நிலையில் தென் சீனப் பெருங்கடல் பகுதியில் சீனாவிற்கு இருந்து வரும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டி அமெரிக்க இராணுவம் அங்கு ரோந்து பணியில் ஈடுபடவும் ஆரம்பித்தது. இதனால் சீனா கடுப்பாகி எச்சரிக்கையை விடுத்த நிலையில் இந்தியா, அமெரிக்கா, தைவான், பிலிப்பைன்ஸ், திபெத் போன்ற நாடுகள் தென் சீனக்கடல் பகுதியில் தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட விரும்பின.
இந்நிலையில் சீன இராணுவம் இன்னும் இந்திய எல்லையை விட்டு அகலாமல் அச்சுறுத்தலை தொடர்ந்து வருகிறது. இதனால் சீன இராணுவச் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்ட அமெரிக்க இராணுவம் முன்வந்திருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்திற்கு இடையே ஏற்படுத்தப்பட்டு உள்ள இந்தப் புதிய ஒப்பந்தத்தினால் சீனாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட இந்தியா முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.