அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே முற்றிவரும் வரும் சர்ச்சை!!! தற்போதைய நிலவரம் என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 18 ஆம் தேதி உலகச் சுகாதார அமைப்பின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் பற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என 120 உலக நாடுகள் வலியுறுத்தி இருந்தன. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் கடும் விவாதம், சர்ச்சை இருக்கும் என உலகமே எதிர்பார்த்த நிலையில் முக்கிய திருப்பமாக முதலில் பேசிய சீன அதிபர் “கொரோனா பரவல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும், சீனா ஆராய்ச்சியாளர்கள் விரைந்து கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பார்கள். இந்த தடுப்பூசி உலகின் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்குமாறு செய்யப்படும்” எனப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து உலகின் அனைத்து நாட்டுத் தலைவர்களும் தங்களது கருத்துகளை பகிரிந்து கொண்டனர்.
இந்நிலையில் உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கொரோனா பரவல் பற்றி விசாரணை நடத்தப்பட்டு விரிவான முடிவுகள் தெரிவிக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அடுத்த நாள் அமெரிக்க அதிபர் உலகச் சுகாதார அமைப்பு 30 நாட்களுக்குள் விரைந்து செயல்படா விட்டால் அமெரிக்கா அந்த அமைப்பில் இருந்து விலகும் எனவும் எச்சரித்து இருந்தார். அதிபரின் எச்சரிக்கையால் பரபரப்பு கிளம்பியது. உலக அளவில் உலகச் சுகாதார அமைப்பிற்கு அதிக நன்கொடை அளித்து வரும் நாடாக அமெரிக்கா இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சீனா ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸை உலக நாடுகளுக்கு பரப்பியது எனக் குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் இதுகுறித்து விசாரணை நடத்தவும் குழுவை நியமித்து இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் பேசினார். அதன்படி அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு கொரோனா வைரஸ் ஆயவகத்தில் இருந்து உருவாக்கப் பட்டது அல்ல. இயற்கையாக பரிணமித்ததுதான் என தெரிவித்து இருந்தது. ஆனாலும் கொரோனா பரவல் சீனாவில் இருந்துதான் தொடங்கியது, அதற்கான இழப்பீட்டுத் தொகையை தர வேண்டும் எனவும் அதிபர் மீண்டும் எச்சரிக்கை விடுத்தார். அதோடு சீனாவிற்கு ஆதரவாக WHO செயல்படுகிறது எனவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து அதன் தலைவர் டெட்ரோஸ் மீதே நேரடியாக குற்றம் சாட்டவும் தொடங்கினார். அமைப்புக்கு வழங்கப்பட்ட நன்கொடையும் நிறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்த பிறகு கடந்த 18 ஆம் தேதி WHO வின் பொதுக்குழுக் கூட்டமும் நடந்து முடிந்தது. உலக நாடுகள் கூறிய கொரோனா பரவல் விசாரணைக்கு தலைவர் டெட்ரோஸ் ஒப்புதல் வழங்கவும் செய்தார். அதற்கு அடுத்தநாளே WHO 30 நாட்களுக்குள் விரைந்து செயல்படாவிட்டால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறி விடப் போவதாகவும் அதிபர் எச்சரித்து இருந்தார். இந்நிலையில் கொரோனா பரவலைக் குறித்து வெளிப்படைத் தன்மையில் அறிக்கை வெளியிட வேண்டும் என்பதே அதிபரின் எச்சரிக்கையாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்து கொண்டே இருக்கும்போது சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க கம்பெனிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் எனவும் அதிபர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இன்னொரு பக்கம் சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகளை கவரும் நோக்கில் இந்திய அரசும் விரைந்து செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று சினாவில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்திற்கு செல்லும் முன்பு அந்நாட்டின் நாடாளுமன்றச் செய்தித் தொடர்பாளர் ஹாங்க யேசூயி “அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் கோவிட் -19 வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது முற்றிலும் ஆதாரமற்றது. இதற்காக எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா கூறியிருப்பதையும ஏற்க முடியாது. இது சர்வதேச உறவுகளின் விதிமுறையை மீறியதாக இருக்கும். ஒருவேளை அமெரிக்கா எங்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தாலோ, மசோதா கொண்டு வந்தாலோ அதற்குக் கடுமையான, தக்க பதிலடி தரப்படும். தங்கள் நாட்டில் பல சொந்தப் பிரச்சனைகள் இருக்கும்போது அதில் கவனம் செலுத்தாமல் மற்ற நாடுகள் மீது குற்றம் சாட்டுவதை அமெரிக்கா முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனச் செய்தியாளர்களிடம் பேசினார்.
மேலும் சீனா மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் “சீனாவில் கொரோனா தொற்று உறுதியானது முதல் பிற நாட்டுக்கும், உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்துத் தகவல்களையும் வெளிப்படைத் தன்மையுடனே வழங்கி வருகிறோம். வைரஸ் தொடர்பாக நாங்கள் சரியான நேரத்தில் உலக்குக்கு எச்சரிக்கை விடுத்தோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவாரங்களுக்கு மத்தியில் இன்னொரு பேச்சும் உலக நாடுகளிடையே அடிபடுகிறது. அதாவது கொரோனா பரவலை சீனா சொல்வதற்கு முன்பே தைவான் உலக சுகாதார அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்தது எனவும் அந்த எச்சரிக்கையை அவர்கள் கண்டுகொள்ள வில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால்தான் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா போன்ற நாடுகள் தற்போது பேச ஆரம்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி முற்றிக்கொண்டே போகும் உலக வல்லரசுகளின் சர்ச்சையால் பொருளாதார ரீதியிலான பாதிப்புகள் ஏற்படுமா எனவும் உலக நாடுகள் தற்போது அச்சம் தெரிவித்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout