சைவ உணவில் பேலியோ டயட்டா? நிபுணர்கள் சொல்லும் விளக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,June 23 2021]

உடல் பருமனை குறைக்க விரும்பும் பலர் தற்போது பேலியோ டயட் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த அடிப்படையில் இந்த பேலியோ டயட்டை குறித்து சில தவறான கருத்துகளும் உலவி வருகின்றன. அதாவது இந்த உணவுப் பழக்கம் ரொம்பவே விலை கூடுதலாக இருக்கும். மேலும் இந்த வகை உணவுப் பழக்கத்தில் அசைவ உணவுகள்தான் அதிகம் இருக்கும் என்பது போன்ற கருத்துகளைச் சிலர் கொண்டு இருக்கின்றனர்.

இதற்கு விடை அளிக்கும் நிபுணர்கள் பேலியோ டயட் என்பது அசைவ உணவுகளை வெளுத்துக் கட்டுவது என்ற அர்த்தம் இல்லை. முழு சைவமாக இருந்தால்கூட இந்த உணவு முறையைப் பின்பற்ற முடியும். மாவுச்சத்தை தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர அசைவம் சாப்பிடுவது நோக்கம் அல்ல எனத் தெரிவித்து உள்ளனர்.

மேலும் கார்போஹைட்ரேட் குறைவாகவும் நல்ல கொழுப்பை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பழக்கம்தான் இந்த பேலியோ டயட் என்றும் எதோ உடல் எடையைக் குறைப்பதற்காக மட்டும் இந்த உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியதில்லை. வாழ்நாள் முழுக்கவே இந்த உணவுப் பழக்கம் நல்ல பலனைக் கொடுக்கும் என நிபுணர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

பெரும்பாலான டயட் முறைகளில் உணவைக் குறைப்பதன் மூலம் கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் பேலியோ டயட்டில் மாவுச் சத்து மட்டுமே குறைவாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் அசைவ உணவுகள் பரிந்துக்கப்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த டயட் முறையில் கலோரி எவ்வளவு இருக்க வேண்டும் என ஒவ்வொரு வேளை உணவையும் கணக்குப் பார்க்கத் தேவையில்லை. வயிறு நிரம்பும்வரை சாப்பிடலாம். சைவ உணவுக்காரர்கள் அசைவத்திற்குப் பதிலாக பனீர் மஞ்சூரியன், பனீர் டிக்கா, பனீர் பட்டர் மசாலாவை சேர்த்துக் கொள்ளலாம். அதோடு எதையும் அளவு பார்க்காமல் பசி அடங்கும் வரை உண்ணலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.