மகனின் உயிரை காப்பாற்றிய தந்தையின் ஒரே ஒரு டுவீட்
- IndiaGlitz, [Sunday,October 08 2017]
சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவை அரட்டை அடிக்கும் பொழுது போக்கு தளங்களாக இருந்த நிலைமை மாறி ஆக்கபூர்வமான பல விஷயங்களுக்கு உதவுகிறது என்பதை பல உதாரணங்களில் இருந்து பார்த்திருக்கின்றோம். அந்த வகையில் ஆபத்தான நிலையில் இருந்த ரயில் பயணி ஒருவரின் மகனை அவருடைய ஒரே ஒரு டுவீட் காப்பாற்றியுள்ள சம்பவம் ஒன்று நேற்று நடந்துள்ளது.
பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் நேற்று மாலை ஹரியானாவை சேர்ந்த தம்பதிகள் தங்கள் மகனுடன் பயணம் செய்தார்கள். ரயில் கிளம்பும்போதே அவர்களின் மகனுக்கு லேசாக காய்ச்சல் இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் காய்ச்சல் அதிகமாகி நீர்ச்சத்து குறைவு காரணமாக அந்த தம்பதியின் மகன் மயக்கமடைந்துவிட்டான்.
இதனால் அதிர்ச்சி அடைந்தாலும் சமயோசிதமாக செயல்பட்ட அந்த சிறுவனின் தந்தை உடனே டுவிட்டரில் தனது மகன் காய்ச்சலால் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தனக்கு யாராவது உதவி செய்யவும் என்று டுவீட் செய்தார். இந்த டுவீட்டை பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் உடனே அந்த டுவீட்டை ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி அவர்களுக்கு ரீடுவீட் செய்தார். இந்த ரீடுவீட்டை பார்த்த ஆச்சாரி உடனே நிலைமையை புரிந்து கொண்டு உடனடியாக போபால் டிவிஷனல் ரயில்வே மேலாளர் சௌத்ரிக்கு போன் செய்து, விஷயத்தைக் கூறி தாமதிக்காமல் உடனடியாக ரயில்நிலையத்தில் ஒரு டாக்டர்கள் குழுவுடன் ஒரு முதலுதவி வாகனத்தை நிறுத்தும்படி அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் சரியாக அரை மணி நேரத்தில் அந்த தம்பதிகள் பயணம் செய்த ரயில் அடுத்த அரை மணி நேரத்தில் இடார்சி ரயில் நிலையத்தை அடைந்தபோது மருத்துவர்கள் குழுவுடன் கூடிய முதலுதவி வாகனம் நின்றது. உடனடியாக காய்ச்சல் பாதித்த சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தற்போது அந்த சிறுவன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதால் அவனது பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஒரே ஒரு டுவீட் ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளது, அதுவும் அரை மணி நேரத்தில் இந்த அதிசயம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.