மீண்டுவருவோம்; நம்பிக்கையளிக்கும் விதத்தில் “கோவிட்” எனப் பெயர்சூட்டப்பட்ட புலிக்குட்டி
- IndiaGlitz, [Tuesday,March 31 2020]
மெக்ஸிகோவின் கோர்டபா நகரில் உள்ள ஒரு தனியார் மிருககாட்சி சாலையில் புதிதாகப் பிறந்த புலிக்குட்டிக்கு “கோவிட்” எனப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. உலகையே முடக்கியுள்ள கொரோனா CoVid-19 வைரஸின் பெயர் ஒரு புலிக்குட்டிக்கு சூட்டப்பட்டுள்ளது பற்றி மிருககாட்சி சாலையின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியையே தெரிவித்து வருகின்றனர்.
மார்ச் 14 ஆம் தேதி, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 8 வயது பெண் புலிக்கு கடும் சிரமத்திற்கு இடையே அழகான புலிக்குட்டி பிறந்தது. கொரோனா வைரஸால் உலகமே கடும் பாதிப்புகளை சந்தித்துவரும் நிலையில் புலியின் வேதனையில் நாங்களும் சிரமத்தைச் சந்தித்தோம். பின்னர் புலிக்குட்டியின் பிறப்பு மகிழ்ச்சியைத் தந்தது. அதைப்போன்று இந்த உலகமும் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வரும். கொரோனா வைரஸில் இருந்து உலகம் மீண்டும் வரவேண்டும் என்ற நம்பிக்கையில் கோவிட் என்று பெயர் சூட்டியுள்ளோம் எனவும் மிருககாட்சி சாலையிலன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த மிருககாட்சி சாலை சர்க்கஸ் போன்ற வணிகத்தில் இருந்து விலங்குகளைக் காப்பாற்றும் நோக்கில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.