தஞ்சை பெரிய கோவில் - ஆற்றங்கரை நாகரிகத்தின் வரலாற்றுச் சிறப்பு
- IndiaGlitz, [Tuesday,February 04 2020]
வண்டல் மண்ணைத் தவிர சுற்றி வேறு எதையுமே காண முடியாத ஒரு ஊரில் இத்தனை பெரிய பிரம்மாண்டம் – தஞ்சை பெரிய கோவில், இராஜ ராஜ சோழனின் பலம் வாயந்த அரசியல் ஆளுமையையே உலகிற்கு பறை சாற்றி நிற்கும் வரலாற்று ஆவணம் என்றே சொல்லலாம்.
இதன் மூலஸ்தானத்தை பார்த்தவர்கள் யாரும் ஆச்சரியப் படாமல் இருக்கவே முடியாது. 80 டன் எடையுள்ள கல்லை, எந்த ஒரு இயந்திர உதவியும் இல்லாத காலத்தில், எப்படி 216 அடி உயரத்துக்கு எடுத்துக் சென்றிருப்பார்கள் என்ற மலைப்பு எல்லோரையும் தொற்றிக் கொள்வது இயல்புதான்.
இந்தக் கல் எப்படி மேலே வைக்கப் பட்டது எனக் கேட்கும் ஒரு குழந்தைக்கு, யானையின் பின்னால் கட்டி இந்தக் கல்லை இழுத்துச் சென்றானாம் இராஜராஜன் என்று பொதுவாகச் சொல்லி வைப்பார்கள். யானை பலசாலி என்பதால் குழந்தையும் நம்பி விடும். உண்மையில் பிரம்மாண்டமான 80 டன் எடையுள்ள ஒற்றைக் கல் கோவில் கோபுரத்தின் மேல் பொருத்தப் பட்டது ஒரு சுவாரசியத்தை வரவழைக்கக் கூடிய கதையாகவே இருக்கிறது.
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள சாரபள்ளம் என்ற ஊர் வரைக்கும் மணலைக் கொட்டி மிகப் பெரிய மிரம்மாண்டமான சாய்வு பாலத்தை அமைத்து, அதன் வழியாகத்தான் இந்தக் கல், கோபுரத்தின் மீது ஏற்றறப் பட்டிருக்கிறது என்று சொன்னால் வருகிற மலைப்பு அலாதியான உணர்வையே ஏற்படுத்துகிறது. மணல் பாதை எப்படி உறுதியானதாக இருந்திருக்கும் என்ற அடுத்த கேள்வி கண்டிப்பாக எழலாம். கிட்டத் தட்ட 50 கி.மீ. தூரத்திற்கு உறுதியான மணல் பாதையை அமைத்திருக்கிறான் இராஜராஜ சோழன். நம்மூரில் இருப்பதைப் போன்று வைகை கரையில் செம்மண்ணோ, களிமண்ணோ கூட கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும்.
அது மட்டுமல்லாது மணல் பாலம், எதிரும் புதிருமாக இரண்டு யானைகள் சென்று வருவதற்கு ஏற்ப உருவாக்கப் பட்டு, இரண்டு பக்கங்களிலும் கற்பலகைகள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். அன்றைக்கு கோவிலே வெறும் மணல் குன்றுகளாகத் தான் காட்சி அளித்திருக்கும். கோவில் வேலைப் பாடுகளுக்கு மண்ணை வெட்டி எடுத்ததால் ஏற்பட்ட பள்ளம் தான் சாரப்பள்ளம் என்று பெயர் வருவதற்கு காரணம் ஆகி விட்டது.
பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் இதில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று தற்போது நமக்குத் தோன்றும். உலகில் பல்வேறு கட்டிடக் கலை வல்லுநர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாக தஞ்சை பெரிய கோவில் இருக்கிறது என்றால் பிரம்மாண்டமான அதன் கோபுர அமைப்பே முழு முதற் காரணமாக இருக்கிறது.
கி.பி. 1004 இல் தொடங்கப் பட்ட இக்கோயில் கட்டுமானம் கி.பி. 1010 இல் முடிக்கப் பட்டு விட்டது. இப்படி ஒரு பிரம்மாண்த்தை வெறும் 6 ஆண்டுகளில் கட்டி முடித்த திறமை இராஜ ராஜ சோழனின் புகழுக்கு எடுத்துக் காட்டு எனலாம்.
திருக்கோவில் நுட்பம்
தொழில் நுட்பங்கள் வானாளவிற்கு வளர்ந்து விட்ட சூழலிலும் ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு முன்பு எவ்வளவு திட்டங்கள் தீட்டப்படுகின்றன? அப்படிப் பார்த்தால் அன்றைக்கு தஞ்சை பெரிய கோவில் கட்டுமானப் பணி எப்படி நடைபெற்றிருக்கும்? ஆயிரக்கணக்கான கேள்விகளையே இது உண்டாக்குகிறது.
எந்த உளியைக் கொண்டு இந்தக் கோவிலை உருவாக்கி இருப்பார்கள்? அந்தக் காலக்கட்டத்தில் எந்த வகையான இரும்பினை பயன்படுத்தி இருப்பார்கள்? இரும்பினை உருக்குவதற்கு எந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டிருக்கும்? கல்லினை கட்டி இழுப்பதற்கு எந்த கயிறினை பயன்படுத்தி இருப்பார்கள்? எவ்வளவு பேர் இதன் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு இருப்பார்கள்? அவர்களுக்கான உணவு எங்கிருந்து வந்திருக்கும்? இதில் ஈடுபடுத்தப் பட்ட விலங்குகள் எவ்வாறு கஷ்ட பட்டு இருக்கும்? விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டு இருக்குமா? அதற்கான மருத்துவர்கள் எங்கிருந்து வந்திருப்பார்கள்? இப்படியான கேள்விகள் நமது ஆச்சரியத்தையும் வியப்பினையுமே காட்டுகிறது.
கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கற்கள் இல்லை, மரம் இல்லை, சுண்ணாம்பு பூச்சு இல்லை, சொற செறப்பான கற்கள் கூட இல்லை. எல்லாமே வெறும் கருங்கல். கருங்கல்லை ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைக்கும்போது அது எப்படி நிற்கும்? ஆனால் இது சாத்தியம் ஆகியிருக்கிறது.
கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி செய்யப்படும் கட்டிடக் கலைக்குப் பெயர் கற்றளி. இந்த கட்டிடக் கலை நுட்பத்தில் தான் பெரும்பாலான சோழக் கோவில் கட்டப்படடுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இதில் சுண்ணம் அதாவது எந்தக் கலவையும் பூச்சு வேலைக்கு சேர்க்கப் படாது என்பது தான் முக்கியமான விஷயமாகும். கோபுரக் கல் மட்டுமல்லாது கோவிலின் முன் புறத்திலும் பல கற்கள் தாங்கு கல்லாக வைக்கப் பட்டுள்ளன. இந்த தாங்கு கற்கள் திருச்சிக்கு அருகில் உள்ள நார்த்தா மலையில் இருந்து எடுத்து வரப் பட்டுள்ளது. பிரம்மாண்டமான இந்தக் கற்களை 60 கி.மீ. தொலைவில் இருந்து எப்படி எடுத்து வந்திருப்பார்கள்? நினைக்க நினைக்க ஆச்சர்யம் தான்.
கோபுரங்களின் உட்பகுதியில் பல வண்ண வேலைபாடுகள், கோபுரங்களின் ஓவியங்கள் போன்றவை அமைக்கப் பட்டுள்ளன. கோபுரத்தின் கூர்மையான பகுதி எகிப்திய கட்டிடக் கலையை ஒத்திருக்கிறது.
வரலாற்று பின்னணி
தஞ்சை பெருவுடையார் கோவில் என்பது தான் வடமொழியில் தஞ்சை பிரகதீசுவரர் ஆலயம் என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் பெரிய லிங்க வழிபாட்டினை உடைய பிரம்மாண்டமான சிவ தலம் என்ற பொருளில் தற்போது தஞ்சை பெரிய கோவில் என்று சொல்லப் பட்டு வருகிறது.
இராஜ ராஜ சோழன் சிவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினதாக சொல்லப்படுகிறது. உண்மையில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் குலத் தெய்வமாக துர்க்கையே விளங்கினாள். கோவில் பிராதான அமைப்பின் இடது புறத்தில் ‘வாராஹி‘ அம்மனுக்குத் தனி நடை அமைக்கப் பட்டுள்ளது. எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு இராஜராஜ சோழன் துர்க்கை அம்மனை வழிபட்ட பின்பு அந்தக் காரியத்தை தொடங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறான்.
மேலும், சோழக் காலத்தில் கோவிலை மையப்படுத்திய நில நிர்வாகம் இருந்தது என்பதும் இத்தகையதொரு பிரம்மாண்டத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சோழர் காலத்தில் அனைத்து நிலங்களும் கோவில் நிர்வாகத்தின் கீழ் வைத்துத்தான் நிர்வகிக்கப் பட்டு வந்தன. அதனால் வலிமையான பொருளாதார அமைப்பு விளங்கியமையும் இந்தகையதொரு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
சிவ லிங்கம்
பல தேர்ந்த வல்லுநர்களைக் கொண்டே இக்கோவில் அமைக்கப் பட்டுள்ளது. இதன் தலைமை சிற்பியாக குஞ்சர மல்லன் இருந்துள்ளார். இவரின் சிறப்பினைக் கருதி ‘ராஜராஜ பெருந்தச்சன்’ என்ற பட்டப் பெயரை இராஜ ராஜன் வழங்கியுள்ளான் என்பது குறிப்பிடத் தக்கது.
இக்கோவிலில் சதுரப் போதிகை எனப்படும் பன்முகத் தூண்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. ஒரே கல்லில் அமைக்கப் பட்டுள்ள நந்தி சிலை 20 டன் எடையைக் கொண்டது ஆகும். நந்தி – 14 மீ உயரம், 7 மீ நீளம், 3 மீ அகலத்தைக் கொண்டிருக்கிறது. நந்தி சிலைக்கான கல் திருச்சியில் உள்ள பச்சை மலையில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளது என்பது முக்கியமான விஷயமாகும்.
இந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகவும் பெரியதாகும். கருவறையில் உள்ள சிவலிங்கம் 6 அடி உயரத்தையும் 54 அடி சுற்றளவினையும் கொண்டது ஆகும். வெளியில் இருந்து பார்க்கும் போது நமக்கு சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு தான் தெரியும் என்பது குறிப்பிடத் தக்கது. ஆவுடையார் லிங்கம் 12 அடி உயரத்தையும் 23 அடி சுற்றளவினையும் கொண்டு விளங்குகிறது. கோவில் இருக்கின்ற பெரும்பாலான கல்வெட்டுகள் இராஜ ராஜ சோழனின் பெருமையையும் குறிப்பிடுவதாகவே அமைந்திருக்கிறது.
சோழர் கால கட்டிடக் கலை
தமிழகத்தில் பெரும்பாலான கோவில்கள் மூலஸ்தானம் குறைந்தும், ராஜகோபுரம் உயர்ந்தும் இருப்பது தான் வழக்கம். ஆனால் சோழர் கால கட்டிடக் கலையில் இது வேறுபடுகிறது. கோவில் மூலஸ்தான விமானம் உயர்ந்தும், ராஜகோபுரம் தாழ்ந்தும் அமைக்கப்படும் முறைகளில் தஞ்சாவூர் பெரிய கோவிலும் ஒன்று. தஞ்சை பெரிய கோவிலின் மூலஸ்தானம் 216 அடிக்கு அமைக்கப் பட்டுள்ளது. இதே போன்ற கட்டடிடக் கலை அமைப்பினை கங்கை கொண்ட சோழபுரத்திலும் காணமுடியும்.
தஞ்சை பெரிய கோவில் அமைப்பினைக் குறித்து இப்படியும் சிலர் பெருமையாகக் குறிப்பிடுவது உண்டு. சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி- தமிழ் உயிர் எழுத்து 12. சிவ லிங்கம் இருக்கும் பீடித்தின் உயரம் 18 அடி – தமிழ் மெய் எழுத்து 18. கோவில் கோபுரத்தின் உயரம் 216 – தமிழ் உயிர் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216. கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையில் இருக்கும் தூரம் 247 அடி – தமிழ் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 247 என்று தமிழோடு பெரிய கோவிலின் பெருமையையும் இணைத்தே பேசப்படுகின்றன.
மொழி, மதம், பண்பாடு என்ற அனைத்துக் கூறுகளைத் தாண்டி தஞ்சை பெரிய கோவில் ஒரு வரலாற்று நாகரிகத்தின் பிரம்மாண்டத்தினை எடுத்துக் காட்டும் அம்சம் என்றே கூறிவிடலாம். வரலாற்று நாயகர்கள் விட்டு சென்ற பிரம்மாண்டத்தை பாகுபாடுகளைத் தவிர்த்து கொண்டாடுவதில் தான் நமது பெருமை அடங்கி இருக்கும். வரலாற்றினை பெருமைப் படுத்தும் முன்னெடுப்புகளில் நாமும் பங்கு கொள்வோம்.