மருத்துவர்கள், நர்ஸ்களுக்காக திறக்கப்பட்ட தாஜ் ஓட்டல்கள்: குவியும் பாராட்டுக்கள்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளும், மால்களும், தியேட்டர்களும்,பள்ளி கல்லூரிகளும், ஸ்டார் ஹோட்டல்களும் மூடப்பட்டன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டாடா நிறுவனத்தின் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. மும்பை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் தங்குவதற்காக தங்கள் நிறுவனத்தின் ஓட்டல்கள் திறக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் தாஜ் குழுமம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் அந்நிறுவனம் கூறியபோது, ‘கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தான் நாட்டின் உண்மையான சூப்பர் ஹீரோக்கள் என்றும், அவர்களது பணிக்கு நாங்கள் தலைவணங்குகிறோம் என்றும், அவர்களது கடினமான பணிகளுக்கு எங்களால் முடிந்த சேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்காக ஸ்டார் ஓட்டலில் இலவசமாக தங்கும் வசதி செய்து கொடுத்த தாஜ் நிறுவனத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே டாடா நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ரூபாய் 1500 கோடி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.