லக்கிம்பூர்- குற்றவாளிகளை கைது செய்யாமல் கெஞ்சுவதா? உ.நீதிமன்றம் காட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உலகையே உலுக்கி வருகிறது. ஆனால் இந்த வழக்கில் இதுவரை சம்பந்தப்பட்ட யாரையும் உத்திரப்பிரதேச போலீசார் கைதுசெய்யவில்லை. மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவரை விசாரணைக்கு ஆஜராகும்படி தினமும் சம்மன் அனுப்பிக் கொண்டிருக்கிறது.
இதனால் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யாமல் ஆஜராகும்படி இன்னும் கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகக் கூறியிருப்பது இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு விழா ஒன்றிற்காக உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உத்திரப்பிரதேசம் வந்திருந்த நிலையில் லக்கிம்பூர் கெரி அருகே சென்று கொண்டிருந்த அவருடைய காரை வழிமறித்து விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்திற்கு இடையே அமைச்சருக்குப் பாதுகாப்புக்காக வந்திருந்த கார் ஒன்று விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவே திடீரென பாய்ந்ததால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்திற்கு இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ராவே காரணம் என்று விவசாயிகள் அமைப்பு குற்றம்சாட்டிய நிலையில் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 4 நாட்களைக் கடந்தபிறகும் அவரை போலீசார் கைது செய்யாமல் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவரை இன்னும் கைது செய்யாமல் இன்று ஆஜராகுங்கள், நாளை அஜராகுங்கள் எனக் கெஞ்சி கொண்டிருக்கிறீர்கள். ஒரு சாதாரணமானவனை நீங்கள் இப்படித்தான் கையாண்டிருப்பீர்களா? லக்கிம்பூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையும் தீர்வாக இருக்காது என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த விஷயத்தை விசாரணை செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments